×

அனல்பறக்கும் பந்துவீச்சா... அதிரடி பேட்டிங்கா... ஐபிஎல் கோப்பை வெல்வது யார்?

மும்பை : கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கும், ஐபிஎல் டி20 சீசன்-11 தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ஜெயிக்கப் போவது, அனல்பறக்கும் பந்துவீச்சை கொண்ட சன்ரைசர்சா அல்லது அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட சூப்பர் கிங்சா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரவு 7 மணிக்கு உச்சகட்ட விறுவிறுப்புடன் போட்டி ஆரம்பமாக உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்துள்ளது. 2008ல் தொடங்கிய இத்தொடரின் 11வது சீசன் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடை முடிந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதற்கேற்றார் போல், கேப்டன் டோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியிலிருந்தே சூப்பராக விளையாடியது. லீக் சுற்றின் முடிவில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் தலா 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று முறையே முதல் 2 இடத்தை பிடித்தன.

குவாலிபயர்-1 போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்சை வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றியுடன் நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து, குவாலிபயர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வென்று பைனலுக்கு முன்னேறியது. ரசிகர்களின் எதிர்பார்ப்புப்படி இந்த சீசனின் மிகச்சிறந்த 2 அணிகள் பைனலுக்கு முன்னேறின. சமபலம் பொருந்திய சன்ரைசர்ஸ் - சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது. இரு அணிகளும் எந்த விதத்திலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை. வலுவான பேட்டிங் வரிசை கொண்ட சூப்பர் கிங்ஸ் 200 ரன்னுக்கும் மேற்பட்ட இலக்கை சேஸ் செய்து வெல்லக்கூடிய திறமை கொண்டது.

அதே போல, 120 ரன் எடுத்தாலும் அதற்குள் எதிரணியை சுருட்டி வெற்றி வாகை சூடும் அனல் பறக்கும் பந்துவீச்சு கூட்டணியை கொண்டது சன்ரைசர்ஸ்.
எனவே இன்றைய பைனல் அனல் பறக்கும் பந்துவீச்சுக்கும், அதிரடி பேட்டிங்குக்கும் நடக்கும் யுத்தமாக கருதப்படுகிறது. பழங்கால மாயாஜால கதைகளில் மிகப்பெரிய ராட்சனின் உயிர் சிறிய கிளியிடம் இருக்கும். அதுபோல, சன்ரைசர்சின் ஒட்டுமொத்த பலமும் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானிடம் உள்ளது. ஒவ்வொரு போட்டியில் தனது அபார பந்துவீச்சால் ரஷித்கான் அணிக்கு வெற்றி தேடித் தருகிறார். டி20ன் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் புகழாராம் சூட்டியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த குவாலிபயர்-2 போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக ரஷித்கான் ஆல்ரவுண்டராகவும் அவதாரம் எடுத்தார். பேட்டிங்கில் 10 பந்தில் 34 ரன் விளாசிய அவர், பந்துவீச்சில் 4 ஓவரில் 19 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 2 அபார கேட்ச்களை பிடித்ததுடன், ஒரு ரன்அவுட்டும் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இவருடன் சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் சிறப்பாக செயல்படுகின்றனர். பேட்டிங்கில் தவான், கேப்டன் வில்லியம்சன் அபார பார்மில் உள்ளனர். கரீபியன் டி20 லீக் தொடரின் பைனலில் ஹீரோவாக திகழ்ந்த ஆல்ரவுண்டர் பிராத்வெயிட் சன்ரைசர்ஸின் மற்றொரு பொக்கிஷமாவார். சூப்பர் கிங்ஸில் கேப்டன் ‘தல’ டோனியை பற்றி சொல்ல வேண்டியதில்லை. எந்த நிலையிலும் ஆட்டத்தின் முடிவை மாற்றக்கூடிய திறமை படைத்தவர். பேட்டிங்கில் அதிரடி காட்டக்கூடியதுடன், ஆட்ட நுணுக்கங்களையும் கறைத்து குடித்தவர். இவருடன் சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஆல் ரவுண்டர்கள் வாட்சன், டுபிளெஸ்சி, பிராவோ என விளாசல் மன்னன்களுக்கு குறைவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், கேப்டன் டோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருக்கிறார். தென் ஆப்ரிக்காவின் என்ஜிடி எதிரணியை மிரட்டுகிறார்.

இவர்களுடன் ரவீந்திர ஜடேஜா, மூத்த வீரர் ஹர்பஜன் சிங்கும் உள்ளனர். எனவே, இன்றைய பைனல் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து, பரபரப்புடன் அனல்தெறிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் வெல்வப் போவது யார்... சீசன்-11 சாம்பியன் யார்... மும்பையில் முடிசூடுவது யார்... என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

மும்பை சாதனையை சமன் செய்யுமா சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் விளையாடிய 9 தொடர்களில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. அந்த அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் மட்டுமே 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இம்முறை நிலவுகிறது. 2013ல் ஐபிஎல்லில் அடியெடுத்து வைத்த சன்ரைசர்ஸ் அணி 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த 2016ல் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் இரு அணிகளின் செயல்பாடு:

அணி விவரம்
சிஎஸ்கே: மகேந்திர சிங் டோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டுபிளெஸ்சி, ஹர்பஜன் சிங், டிவெய்ன் பிராவோ, ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, தீபக் சாஹர், கே.எம்.ஆஷிப், கேனிஷ் சேத், என்ஜிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், ஸ்திஷ் ஷர்மா, மோனு குமார், பிஷ்னாய், இம்ரான் தஹிர், கரன் ஷர்மா, சர்துல் தாகூர், ஜகதீசன் மற்றும் டேவிட் வில்லி.

சன்ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஷிகார் தவான், மணிஷ் பாண்டே, புவனேஸ்வர் குமார், விர்திமான் சாஹா, சித்தார்த் கவுல், தீபக் ஹூடா, காலீல் அகமது, சந்தீப் ஷர்மா, யூசுப் பதான், கோஸ்வாமி, ரிக்கி, பசில் தாம்பி, டி.நடராஜன், சச்சின் பேபி, பிபுல் ஷர்மா, மெஹ்தி ஹசன், டன்மே அகர்வால், அலெக்ஸ் ஹேல்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட், ரஷித் கான், ஷாகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் கிறிஸ் ஜோர்டன்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி