×

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: பாஜ வெளிநடப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி 116 உறுப்பினர்களின் ஆதரவுடன்  வெற்றி பெற்றார். பாஜ வெளிநடப்பு செய்தது.  கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மஜத.வை சேர்ந்த குமாரசாமி புதிய முதல்வராகவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர்  துணை முதல்வராகவும் கடந்த 23ம் தேதி பதவியேற்றனர். பதவியேற்ற 15 நாட்களில் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி குமாராசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.

அதன்படி, சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை முதல்வர் குமாரசாமி நேற்று கூட்டினார். அதில், தனது அரசு  மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டதின் நோக்கம், ஆட்சியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை குமாரசாமி விளக்கினார். அவரை ெதாடர்ந்து, பாஜ. சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசினார். அவர்,  ‘‘மஜத-காங்கிரஸ் கூட்டணி,  மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி கிடையாது’’ என்று  கடுமையாக விமர்சித்தார்.

மேலும், ‘‘மஜத.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி  செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பை 24 மணி நேரத்தில் வெளியிடவில்லை என்றால், வரும் திங்கட்கிழமை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை பாஜ நடத்தும். மக்களுக்கு விரோதமாக அமைந்துள்ள இந்த கூட்டணி அரசை ஆதரிக்க  மாட்டோம்’’ என்று கூறி தனது கட்சி எம்எல்ஏ.க்களுடன் அவர் வெளிநடப்பு செய்தார்.

 இதைத் தொடர்ந்து, குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ரமேஷ் குமார் கேட்டுக்கொண்டார். அப்போது,  அவையில் இருந்த (சபாநாயகர் தவிர்த்து) காங்கிரஸ்-77, மஜத 36, பகுஜன்  சமாஜ்-1 மற்றும் சுயேச்சைகள் 2 என மொத்தம் 116 உறுப்பினர்கள் குரல்  வாக்கின் மூலம் ஆதரவு தெரிவித்தனர். அவையில் யாரும் எதிர்ப்பு  தெரிவிக்காததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி  பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைத்தபின் தேதி குறிப்பிடால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

எம்எல்ஏ.க்கள் வீடு திரும்பினர்
கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜ. முதலில் ஆட்சி அமைத்தது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், மஜத எ்ம்எல்ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பாஜ இறங்கியது. இதனால், இரு கட்சி எம்எல்ஏ.க்களும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பெங்களூரு இந்திராநகரில் உள்ள ஹில்டன் ஒட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும்,  பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளியில் உள்ள சொகுசு விடுதியில் மஜத எம்எல்ஏ.க்களும் தங்க வைக்கப்பட்டனர்.  

சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நேற்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, இரு கட்சி  எம்எல்ஏ.க்களும் பாதுகாப்பாக பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ்  கூட்டணி அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து, இரு கட்சி எம்எல்ஏ.க்களும்   பல நாட்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...