×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக அரசு நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர்  காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக அரசு நேற்று அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எத்தனை நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டது, 100வது நாளின்போது போராட்டக்காரர்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதில் ஏற்பட்ட உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் விவரம் போன்றவை இடம் பெற்றுள்ளன.  மேலும், துப்பாக்கிச்சூடு  சம்பவம் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிந்த பிறகு,  தூத்துக்குடி சம்பவம் தொடர்பான முழு அறிக்கை மீண்டும் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த உத்தரவு
 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எப்போது அனுமதி கொடுத்து தொடங்கப்பட்டது, அதில் நடைபெற்று வரும் பணிகள்  என்ன என்பது குறித்து முழு அளவில் ஆய்வு நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளேன். அதன்படி, அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறனர். முதல் கட்டமாக ஆவணங்கள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டு விட்டது. ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும் பணி விரைவில் தொடங்கும்’’ என்றார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...