×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ.க்கு ஐகோர்ட் நோட்டீஸ்: இணைய சேவை குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவிற்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தமிழக அரசுக்கும் சிபிஐக்கும் கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் மனு அனுப்பியிருந்தார்.
இந்த மனு மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்காததால். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் ஆஜராகி, தூத்துக்குடி மக்கள் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை தமிழக அரசு விசாரித்தால் தீர்வு கிடைக்காது.

எனவே சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிய முடியும். மேலும் இன்டர்நெட் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், படிக்கின்ற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பல அசம்பாவித சம்பவங்களை தடுக்கவே இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி பகுதியில் இயல்புநிலை திரும்பி உள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, இயல்புநிலை திரும்புகிறது என்றால் ஏன், இன்னும் இணைய சேவையை வழங்காமல் இருக்கிறீர்கள், தேர்வு எழுதிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சில பிரச்னைகளை கட்டுப்படுத்தவே இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கடிதத்தையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், சிபிஐ விசாரிக்க கோரிய மனுவிற்கு சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...