×

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு, போராட்டக் குழு இடையே ஒப்பந்தம் தேவை: ராமதாஸ் அறிக்கை

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 13 அப்பாவிகளின் உயிரை பலி கொண்ட பிறகுதான், இப்படி ஒரு  முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. தமிழக அரசு ஸ்டெர்லைட் மூடல் வாக்குறுதியை நிறைவேற்றும் என்று தோன்றவில்லை.

அதனால்தான் போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் அறிவிக்கவில்லை. முதல்வரின் வாய்வழி அறிவிப்பை யாரும் நம்ப மாட்டார்கள். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவாதம் அளிக்குமா?
ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, அதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இது ஒன்றுதான் வழி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...