×

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.  தமிழக அரசின் இந்த கொடூர செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றன.

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தின.சென்னை  எழும்பூர் ரயில் நிலையத்தில் திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இந்த முற்றுகை போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின் போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் இருந்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சி தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலமாக எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் சென்று ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆனால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகளை வைத்து போராட்டம் நடத்திய தொண்டர்களை ரயில் நிலையத்திற்குள் நுழையாதவாறு தடுத்தனர். இருப்பினும் சிலர் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் சென்றனர். உடனே போலீசார் ஓடிச் சென்று அவர்களை தடுத்து ரயில் நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி, ஜவாஹிருல்லா, திருமாவளவன், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள பள்ளி மற்றும் சமுதாய நலக் கூடத்தில் அடைத்து வைத்தனர். இந்த போராட்டத்தினால் எழும்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...