×

துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவின் மனைவி கதறல்: ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினால்தான் என் கணவரின் ஆன்மா சாந்தியடையும்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடினால்தான் என் கணவரின் ஆன்மா சாந்தியடையும் என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவின் மனைவி கூறினார். தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கந்தையா(58). இவரது மனைவி செல்வமணி. இவர்களது ஒரே ஒரு மகன் ஜெகதீஸ்வரன் (25). மனவளர்ச்சி குன்றியவர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எங்கு போராட்டம் நடந்தாலும் கந்தையா கலந்து கொள்வது வழக்கம். கடந்த 22ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் முதலில் குண்டடிபட்டு உயிரிழந்தது கந்தையா தான்.

இதுகுறித்து அவரது மனைவி செல்வமணி கண்ணீர் மல்க கூறியதாவது: எனது கணவர், பொதுமக்களின் நலனுக்காகவும், தூத்துக்குடி நகர எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும் போராட சென்றார். ஆனால் போராடச்சென்றவர் வீடு திரும்பவில்லை. மனநிலை பாதித்த மகனை நான் பராமரித்து வந்ததால் அவர் கூலி வேலைக்கு சென்று எங்களை காப்பாற்றி வந்தார். இனி மகனும், நானும் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியவில்லை. எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. கந்தையாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. கடந்த 4 நாட்களாக அழுது, அழுது கண்ணீருடன் காட்சியளிக்கிறார்.

நடவடிக்கை எடுக்காதவரை உடல்களை பெற மாட்டோம்: கந்தையாவின் உறவினர் மகேந்திரன் கூறியதாவது:  கலெக்டரின் வறட்டு கவுரவம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் தான் 100 நாட்கள் போராட்டம் நீடித்து, அது துப்பாக்கிச் சூடுக்கு வழிவகுத்தது. இந்த பிரச்னை முற்றியதற்கு கலெக்டரும், எஸ்.பி.யும் தான் காரணம். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள், தூண்டுகோலாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூடுக்கு காரணமான கலெக்டர், எஸ்பி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடல்களை பெறுவோம். அதுவரை உடல்களை பெற மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.




வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...