×

ஸ்டெர்லைட் மூடல் அரசின் ஏமாற்று வேலை: நெல்லையில் வைகோ ஆவேசம்

நெல்லை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும் என நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசை கண்டித்தும் நெல்லையில் நேற்று மதிமுக  சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடியில் பலியானவர்களின் குடும்பத்தை பார்க்க ஒவ்வொரு வீடாகச் சென்றேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இவ்வளவு பிரச்னைகள் நடந்த பிறகும் அந்த ஆலையை தொடர்ந்து நடத்துவோம் என அதன் உரிமையாளர் பேசுகிறார்.

அந்த ஆலையின் நச்சுக்காற்றால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் உருவாகின்றன. இன்றைக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தவில்லை. மக்களே தன்னெழுச்சியாக இந்த போராட்டத்திற்கு திரண்டு வருகின்றனர். இவ்வளவு பிரச்னைகளுக்கு பிறகு எஸ்பி, கலெக்டர் ஆகியோரை ஏன் இந்த அரசு இடமாற்றம் செய்துள்ளது? அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றாமல் நான் சாகமாட்டேன்.

குஜராத், கோவா, கர்நாடகம் என பல மாநிலங்கள் உள்ளே விட மறுத்த தொழிற்சாலையை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். ஜெயலலிதா 15 நாளில் அந்த ஆலைக்கு லைசென்ஸ் அளித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும். சென்னையில் இருந்து கொண்டு பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் எடப்பாடி தூத்துக்குடி பக்கம் கொஞ்சம் வந்து பார்க்கட்டும், என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…