×

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலி: தவறை தட்டிக்கேட்பவரை கொன்றுவிட்டார்களே... ஆரியப்பட்டி கிராம மக்கள் சோகம்

பேரையூர்:  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆரியபட்டி ஜெயராமனின் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியை சேர்ந்த ஜெயராமனும்(43) ஒருவர். மனைவி பாலம்மாள். மகள் நந்தினி(18). இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
விவசாய கூலி தொழிலாளியான ஜெயராமன், தொடக்கத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்தார். மக்கள் பிரச்னைக்காக போராடி பலமுறை சிறை சென்றுள்ளார். தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து பொது பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

மே 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு சென்றவர், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மக்கள் பிரச்னைக்காக போராடி உயிர்நீத்த ஜெயராமனை எண்ணி, ஆரியபட்டி கிராமமே ஆறாத சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆரியபட்டியை சேர்ந்த முத்தையா கூறுகையில், ‘‘இந்த கிராமத்திலேயே மிகவும் அமைதியானவர் ஜெயராமன். எந்த வம்புக்கும் போகாதவர். பொதுப்பிரச்னை என்றால் முதல் ஆளாக நின்று தட்டிக்கேட்க கூடியவர். இவரைப்போய் போலீசார் சுட்டு கொன்று விட்டார்களே’’ என்றார்.

ராசு என்பவர் கூறுகையில், ‘‘மிகவும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகளை கல்லூரியில் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் இவர் ஒருவர் உழைத்துதான் அனைவரும் சாப்பிட வேண்டிய சூழ்நிலை. இனிமேல் இவரது மனைவி, மகளின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாகி போனது’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற...