×

தேசிய சட்ட படிப்பு சேர்க்கை தகுதித் தேர்வு: மாணவர்கள் புகார்களை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் குழு: நாளை மாலை 7மணி வரை அனுப்பலாம்

புதுடெல்லி: ‘சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வின்போது நடந்த கோளாறுகள் தொடர்பாக நாளை மாலை 7 மணி வரை ஆன்லைனில் புகார் அளிக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தேசிய நவீன சட்ட படிப்பு பல்கலைக் கழகம்’ கடந்த 13ம் தேதி தேசிய அளவிலான தகுதித் தேர்வை நடத்தியது. இரண்டு மணி நேரத்தில் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தேர்வின்போது கம்ப்யூட்டர்களில் மின்சார தடை, லாக்-இன் நடைமுறையில் சிக்கல், திரை கோளாறு, அடிக்கடி ‘ரீசெட்’ ஆனது என்பது உட்பட பல்வேறு விதமான கோளாறுகள் ஏற்பட்டன. இத்தேர்வின் முடிவுகள் வரும் 31ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்வின்போது தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் 6 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய பல்கலைக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மாணவர்களின் புகார்களை விசாரிக்க கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிகரன் நாயர் தலைமையில் இருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ’’ என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இருநபர் குழுவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரியில்,  பாதிக்கப்பட்ட மாணவர்கள் மே 27ம் தேதி மாலை 7 மணி வரை ஆன்லைனில் புகார்கள் அனுப்பலாம்.

இந்த புகார்களை விசாரணைக் குழு விரைவாக விசாரித்து, அவற்றின் தன்மைக்கு ஏற்ப தீர்வுகளை முடிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, மே 30ம் தேதியே இந்த விசாரணை யின் நிலவரத்தை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேர்வு தொடர்பாக தொடரப்படும் எந்த வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்கக் கூடாது’’ என தெரிவித்தனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...