×

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆடிட்டரின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை : துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவுகளை பார்க்காமல் உடல்களை ஒப்படைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு வக்கீல்களை அனுமதிக்க வேண்டும், சுட்டு கொல்லப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், டி.பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ரவீந்திரன், பி.வேல்முருகன் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடலை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று கூறி கடந்த 23ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் உறவினர்கள் உடலை கேட்டு போராட்டம் நடத்துவதாகவும், பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு உள்ளதால், நாங்கள் என்ன செய்வது என்று நீதிமன்றம் விளக்கமளித்து தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது, உடலை பதப்படுத்தி தான் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் இறந்து போன தூத்துக்குடி மாவட்டம் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் சண்முகத்தின் உடலை இறுதி சடங்கு செய்வதற்காக வழங்க அனுமதி கோரி உயிரிழந்தவரின் தந்தை பாலையா சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது மகன் பி.காம், எம்.பி.ஏ முடித்து ஆடிட்டராக இருந்து வந்தார். போராட்டத்துக்கும் எனது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எங்களது வீட்டை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிக்காக ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது போராட்டத்தில் சிக்கி துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார். எனவே அவருக்கு முறைப்படி சடங்குகள் செய்ய உடலை எங்களிடம் ஒப்படைக்க வேன்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உடற்கூறு ஆய்வின் அறிக்கையை நீதிமன்றம் பார்த்த பிறகுதான் உடலை ஒப்படைப்பது குறித்து உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று பாலையாவின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் இது தொடர்பாக ஏற்கனவே உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்ந்து பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...