×

நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - டிஎம்எஸ் சேவை துவக்கம் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

சென்னை : மாதவரம் முதல் சிறுசேரி, கோயம்பேடு பேருந்து  நிலையம் முதல் கலங்கரை விளக்கம்  மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 107.55 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களில் ரூ79,961 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை  வழங்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். சென்னையில் நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் எழும்பூர், சென்ட்ரல், சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ் ஆகிய 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.

சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தமிழக அரசு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 22 கி.மீ. நீளத்தில் செயல்படுத்தப்படும் ’பச்சை’ வழித்தடத்தில் பரங்கிமலை முதல் நேரு பூங்கா வரை ஏற்கனவே பயணிகள் சேவை நடந்து வருகிறது.
தற்போது திறக்கப்படும் நேரு பூங்கா முதல் சென்ட்ரல்  வரையிலான சுரங்கப் பாதையுடன் அனைத்து பச்சை வழித்தட பகுதிகளிலும் பயணிகள் சேவை தொடங்கியுள்ளது. மேலும் 23 கி.மீ. நீளத்திலான ’நீல’ வழித்தடத்தில் விமான நிலையம் முதல் சின்னமலை வரை ஏற்கனவே பயணிகள் சேவை நடந்து வருகிறது. தற்போது திறக்கப்படும் சின்னமலை முதல் ஏ.ஜி.-டி.எம்.எஸ். வரையிலான சுரங்க வழித்தட பகுதியுடன் 13 கி.மீ. நீளத்திலான பாதையில் பயணிகள் சேவை நடைபெற தொடங்கியுள்ளது. எஞ்சியுள்ள 10 கி.மீ. நீளத்திலான ஏ.ஜி.-டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையில் சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ  ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடியும்.
 
மேலும், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் -விம்கோ நகர் வரையிலான ரூ3770 கோடி மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்ட நீட்டிப்பு திட்டத்திற்கு ஜெயலலிதாவால் 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள், ஜூன் 2020க்குள் முடியும்.
இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டங்களில், மொத்த வழித்தடத்தில் அதிக பகுதி சுரங்கப்பாதையாக அமைக்கப்படுவது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்தான். மெட்ரோ ரயில் வண்டியை பிரேக் பிடித்து நிறுத்தும்போது, அதன்மூலம் தானாகவே மின் சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டுள்ள வழித்தட பகுதிகளில் இதுவரை 1.64 கோடி பேர் பயணம் செய்துள்ளார்கள். 54 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - I,  தற்போது சென்னை பெருநகர் பகுதியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு போதாது என்பதை உணர்ந்த அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-IIல் மூன்று
    

மெட்ரோ ரயில் வழித்தடங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ரூ.79,961 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 107.55 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களான - மாதவரம் முதல் சிறுசேரி வரையில் ஒரு வழித்தடமும், சென்னை புறநகர் பேருந்து  நிலையம் முதல் கலங்கரை  விளக்கம் வரை ஒரு வழித்தடமும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறுவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II கீழ் செயல்படுத்தப்பட உள்ள 107.55 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மற்றும் மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலுமான 52.01 கி.மீ. நீளத்திலான வழித்தட பகுதிக்கு மட்டும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இதற்கான நிதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் இருந்து பெறப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் துவக்கப்படும். மேலும் 17.12 கி.மீ நீளத்திலான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தட பகுதிக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி பெறுவதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகின்றது. நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தபடி கோயம்புத்தூர் மாநகரத்தில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான நிதியை  ஜெர்மன் நிதி நிறுவனம் வழங்குகிறது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II ன் கீழ் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வழித்தடம் நான்கை மாற்றியமைத்து, கலங்கரை விளக்கம் முதல் வடபழநி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை எடுத்துச் செல்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரயில் பாதையை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்து சென்னை நகரில் உள்ள துரித போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை பெருநகர் பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு வரும் ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டம்-IIன் கீழ் செய்யப்பட உள்ளது.

இவ்வளவு பெரிய அளவிலான முதலீட்டால், சென்னை பெருநகர் பகுதியில் பெருமளவிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடல்லாமல், வேலைவாய்ப்பு வசதிகளும் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால்,  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை அதிகாரிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல், எம்பி, எம்எல்ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சென்ட்ரல்-கோயம்பேடு 17 நிமிடத்தில் செல்லலாம்
மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் காணப்படுகிறது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல 40 நிமிடங்கள் ஆகும். சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு 17 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. குறிப்பாக நேரு பூங்கா-எழும்பூர், எழும்பூர்-கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் - திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் 1 நிமிடமும், கீழ்ப்பாக்கம்- பச்சையப்பன் கல்லூரி, அண்ணாநகர் கிழக்கு-அண்ணாநகர் டவர்க்கு ஒன்றரை நிமிடங்களும், பச்சையப்பன் கல்லூரி-ஷெனாய்நகர், ஷெனாய்நகர்-அண்ணாநகர், கோயம்பேடு-புறநகர் கோயம்பேடு நிறுத்தத்திற்கு 2 நிமிடங்களும் பயண நேரம் ஆகிறது. இதேபோல், திருமங்கலம் முதல் கோயம்பேடு வரையில் 3 நிமிடம் பயண நேரம் ஆகிறது. இதேபோல், டி.எம்.எஸ்சில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு 20 நிமிடமும், டி.எம்.எஸ் முதல் சின்னமலை செல்வதற்கு 6 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.


பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல்
மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இரண்டு வழித்தடத்திலும் கடந்த 14, 15 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு நடத்தினார். அப்போது பாதுகாப்பு அம்சங்கள், தண்டவாளத்தின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதையடுத்து இரண்டு வழித்தடங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கு பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கிடைத்தது.

ஸ்மார்ட் கார்டு திட்டம்
சுரங்கப்பாதையின் இரு வழித்தடங்களும் திறக்கப்படுவதால் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு, நேரு பூங்கா வழியாக சென்ட்ரல் வரையும், கிண்டி, சின்னமலை வழியாக தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வரையும் மெட்ரோ ரயில் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீட்டிக்கப்படும். இதேபோல், மற்ற ரயில் நிலையங்களில் உள்ளதை போன்று ஸ்மார்ட் கார்டு திட்டமும் உள்ளது. இதில் 10 சதவிகித கட்டண சலுகையில் பொதுமக்கள் வாங்கி பயணம் செய்யலாம்.

கட்டணம் நிர்ணயம்
விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரூ.70ம், விமான நிலையத்தில் இருந்து எழும்பூருக்கு ரூ.60, அதேபோல், எழும்பூரில் இருந்து சென்ட்ரலுக்கு ரூ.10ம், சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரையில் ரூ.40, விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வழியாக டி.எம்.எஸ்க்கு ரூ.50ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
ஒரு நாளைக்கு மெட்ரோ ரயிலில் 20 ஆயிரம் பேர் வரையில் பயணம் செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் சேவைகளில் தடை ஏற்படும் போது மெட்ரோ ரயில் சேவையானது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் இந்த இரண்டு சுரங்கப்பாதை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்ட்ரல் பயணிகள் மகிழ்ச்சி
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்ல இதுவரை பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மின்சார ரயில்கள், கால்டாக்சி, பேருந்து ஆகியவற்றின் மூலமே இதுவரையில் பயணிகள் பயணம் செய்தனர். இதனால், பயணிகள் விமான நிலையம் செல்வதற்கு நீண்ட நேரமானது. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்கு எளிமையாக செல்ல மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், மிக விரைவாக பயணிகள் சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல முடியும்.

கார், பைக் பார்க்கிங் இடங்கள் முடிக்கும் பணி தீவிரம்
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லை. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது விரைவில் முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம்
நேரு பூங்கா-சென்ட்ரல் மற்றும் சின்னமலை- டி.எம்.எஸ் வழித்தடத்தில் நேற்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு 10.30 மணி வரையில் இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல், இந்த வழித்தடங்களில் இன்று 2வது நாளாகவும் மெட்ரோ ரயில் சேவை இலவசமாக வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இன்று இரவு 10.30 மணி வரையில் இந்த வழித்தடங்களில் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம். நாளை முதல் இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முறையான கட்டணம் வசூல் செய்யப்படும்.

1 லட்சம் பயணிகள் இலக்கு
இதுவரை மெட்ரோ ரயில் சேவையை சுமார் 35 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக தொடங்கப்பட்ட இந்த இரண்டு வழித்தடங்களின் மூலம் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவர்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...