×

போராட்டம் நடத்தினால் விவசாயிகளையும் போலீஸ் சுடுமா? அய்யாக்கண்ணு அச்சம்

விருத்தாசலம் : தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, விவசாய  விளை பொருளுக்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை. கரும்புக்கு 90 ரூபாய் கிடைத்தபோது, ஆசிரியர்களுக்கு சம்பளம்  90 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் 50 ஆயிரம்  முதல் 70 வரை சம்பளம் பெறுகிறார்கள். அதில்  ஒரு பங்கு  கொடுத்தால்கூட தற்போது ஐந்தாயிரம் ரூபாய் கரும்புக்கு  வழங்க வேண்டும். அதுபோல் நெல்லுக்கும் மத்திய அரசு 16 ரூபாய் 60 பைசா அறிவித்துள்ளது. 16 ரூபாய் போதாது 36 ரூபாய்  தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அனைவருக்கும் இந்த அரசு அள்ளித்தருகிறது.

ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் கிள்ளி கொடுக்கிறது. ஜனநாயக  நாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருப்பது தான் முக்கியமான  கொள்கையாக இருக்கவேண்டும். இதுபோல் போராட்டம் நடத்தினால் விவசாயிகளையும் போலீசார்  சுட்டு  விடுவார்களோ என்று பயப்படுகிறோம். காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராடி வந்தோம்  ஆனால் அவர்கள் ஆணையம் அமைத்துள்ளனர்.  ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது  பிறகுதான் தெரியும். வரும் 10ம் தேதி சென்னை சென்று  முதல்வரைச் சந்திக்க உள்ளோம். அடுத்து டெல்லிக்குச் சென்று  தடுப்பணை கட்டுவதற்கும் ஏரி குளங்களை தூர் வாருவதற்கு  ரூ10,000 கோடி ஒதுக்க வேண்டும், என்றார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!