×

பாகனை மிதித்து கொன்றது சமயபுரம் கோயில் யானை பக்தர்கள் ஓட்டம்

மண்ணச்சநல்லூர் : திருச்சி  சமயபுரம் கோயில் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்த போது,  திடீரென்று பாகனை மிதித்து கொன்றது. இதை பார்த்த பக்தர்கள்அலறியடித்து  ஓடினர். தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில், அபிஷேக காலங்களில் அம்மனுக்கு சேவை செய்வதற்காக மசினி என்ற பெண் யானை உள்ளது. அபிஷேக நேரத்தில் யானை கோயில் வளாகத்திற்குள் அழைத்து வரப்படும். மற்ற நேரங்களில் யானை அங்குள்ள ஒரு அறையில் அடைத்து வைக்கப்படும். யானையை பாகன் கஜேந்திரன் (44) பராமரித்து வந்தார். நேற்று காலை  வழக்கம்போல யானையை கஜேந்திரன் கோயில் வளாகத்திற்குள் அழைத்து  வந்தார். உற்சவர் அம்மனுக்கு அருகே உள்ள இடத்தில் யானையை நிற்கவைத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கும்படி செய்திருந்தார். யானைக்கு பக்தர்கள் பழம்,  தேங்காய் கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு  பெண்ைண துதிக்கையால் தள்ளியது. இதனால் அந்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைக்கண்டு  அதிர்ச்சி அடைந்த பாகன், யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  முயன்றார். ஆனாலும் யானை அடம்பிடித்தது. உடனே, தனது கையில் இருந்த அங்குசத்தால் யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றார். பாகனின் செயலை விரும்பாத  யானை சப்தமாக பிளிறியது. இந்த சப்தத்தை கேட்ட பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் யானைக்கு மதம் பிடித்து தனது காலால் பாகனை மிதித்தது. இதை எதிர்பாராத பாகன் யானையின் தாக்குதலால் படுகாயமடைந்து கீேழ விழுந்தார். குற்றுயிரும் குலையுயிருமாக கீழே சாய்ந்த பாகனை துதிக்கையால் தட்டியபடியும், உருட்டி சென்றபடியும் திரிந்தது. பின்னர், கால்பந்து ஆடுவதுபோல் காலால் தள்ளி சென்றது. சிறிதுநேரத்தில், காலால் மீண்டும் மிதித்தது. இதில் பாகன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சமயபுரம் போலீசார், லால்குடி ஆர்டிஓ பாலாஜி மற்றும்  வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

பக்தர்கள் அனைவரும்  வெளியேறியவுடன் கோயில் நடை சாத்தப்பட்டது. பாகனை மிதித்து கொன்ற யானை அங்கேயே நின்றுகொண்டு அமைதியின்றி சுற்றி வந்தது. அவ்வப்போது பாகனின் உடலை கால்களால் மிதித்தது. கோயில் பின்வாசல் வழியாக அறநிலையத்துறை அலுவலர்கள், வனத்துறையினர் நுழைந்து யானையை சாந்தப்படுத்தும்  முயற்சியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை  சாந்தமடைந்தது. உடனே யானையின் கால்களில் கயிறுகள்  கட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் பாகனின் உடலை  மீட்டு பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று நடை திறக்கப்படும்: இதைத்தொடர்ந்து, ஆர்டிஓ பாலாஜி தெரிவித்ததாவது: யானை  மசினி, பாகனை தவிர மற்ற எவரையும் தாக்கவில்லை. இதையொட்டி கோயில் நடை  சாத்தப்பட்டுள்ளது. யானையை இன்று  (நேற்று) நள்ளிரவு நேரத்தில் கோயிலில்  இருந்து வெளியேற்ற நடவடிக்கை  எடுக்கப்படும். நாளை காலை கோயிலில் பாகனை கொன்ற இடத்தில்  சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நடைதிறக்க நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மகன் கண்முன்னே...
பாகன் கஜேந்திரனின் மகன் அச்சுதன் (25). தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். நேற்று கோயில் யானை மசினி தனது தந்தையை மிதித்ததை பார்த்த அச்சுதன் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும், இங்கும் ஓடினார். தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கோயில் குப்பை தொட்டியில் இருந்த வாட்டர் கேன் எடுத்து வீசினார். எதற்கும் கட்டுப்படாத யானை தனது கண்முன்னே தந்தையை மிதித்து கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினார்

ஜெயலலிதா வழங்கிய யானை
2008-ம் ஆண்டு முதுமலையில் ஒரு குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தெப்பக்காடு முகாமில் பராமரித்து வந்தனர். மசினி என்ற கோயிலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டதால் அந்த யானைக்கு மசினி என்று  பெயரிடப்பட்டது. அந்தவேளையில், சமயபுரம் கோயில் யானை மாரியப்பனுக்கு மதம் பிடித்ததால் டாப்சிலிப் முகாமுக்கு மாற்றப்பட்டது. யானை இல்லாமல் இருந்த சமயபுரம் கோயிலுக்கு 2016ல் தனது பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா, யானை மசினியை வழங்கினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...