×

மணப்பாறை வாலிபருக்கு நிபா வைரஸ் தாக்குதல்?

மணப்பாறை : மணப்பாறை வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கம் இருக்குமோ என்ற அச்சத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் அடுத்த கார்வாடி கிராமத்தை சேர்ந்த ராசு மகன் பெரியசாமி(23). இவர் கேரளா மாநிலம் கண்ணூரில் சாலை அமைக்கும் பணியில் தார் ஊற்றும் வேலை செய்து வருகிறார். கடந்த 23ம்தேதி சொந்த ஊருக்கு வந்த பெரிசாமிக்கு காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்த்தனர். கேரளாவில் தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பெரியசாமிக்கும் அதன் தாக்கம் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அனிதா அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புதுக்கோட்டை கீரனூரை சேர்ந்த கார்த்தி என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவர் கேரளா வழியாக சபரிமலைக்கு 3 நாள் சென்றுவிட்டு வந்தவர். தற்போது அவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. மற்றபடி வைரஸ் காய்ச்சல் எதுவும் இல்லை. அவர் தற்போது நலமுடன் உள்ளார். இதேபோல் பெரியசாமி காய்ச்சலால் தனி வார்டில் நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டார். அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த 6 மாதமாக தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஊர் திரும்பிய அவருக்கு சாதாரண சளி, காய்ச்சல் தான் ஏற்பட்டுள்ளது. அவரும் நலமுடன் எழுந்து உட்கார்ந்துள்ளார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை நிபா வைரஸ் காய்ச்சலுக்கு யாரும் சிகிச்சை பெறவில்லை. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: நாளை தியேட்டரில் பகல்நேர காட்சிகள் ரத்து