×

கனடாவில் மர்ம நபர்கள் தாக்குதல் இந்திய ஒட்டலில் குண்டுவெடிப்பு: 15 பேர் காயம்

டொரன்டோ:  கனடாவில் உள்ள இந்திய உணவகத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர். கனடாவின் ஆன்டரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் பாம்பே பேல் என்ற பெயரில் இந்திய உணவகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு உணவகத்திற்குள் நுழைந்த 2 மர்மநபர்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ெசன்றுள்ளனர். இந்த தாக்குதலில் உணவகத்தில் இருந்த 15 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மநபர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்கும் வகையில் சிசிடிவியில் பதிவாகியுள்ள அவர்களது காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது உணவகத்திற்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த பிரேசிலை சேர்ந்த மாணவர் ரபீல் கான்சியோகோ கூறுகையில், உணவகத்தின் வெளிவளாகத்தில் நான் நின்றிருந்தேன். அங்கு ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர். ஒருவரது கண்ணில் கண்ணாடி துண்டு புகுந்தது. ஒரே அலறல் சத்தமாக இருந்தது” என்றார்.

சுஷ்மா நடவடிக்கை
வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பதிவில், ‘கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடித்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. டொரன்டோ மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை தூதரக அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அவசர உதவிக்கான எண் 647-668-4108’ என கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்