×

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 195 கோடி பறிமுதல்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.195 கோடி பணமும், 400 ஆடம்பர கைபைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கடந்த 10ம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக்.  இவர் தனது ஆட்சி காலத்தில்  அரசு பணத்தை சுரண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நஜீப் ரசாக் மறுத்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி சமீபத்தில் நடந்த தேர்தலிலும் எதிரொலித்தது. நஜீப் ரசாக் தலைமையிலான பாரிசன் நேஷனல் கூட்டணி தோல்வி அடைந்தது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம் நஜீப்பின் வீடு உட்பட அவருக்கு சொந்தமான 12 இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 5 லாரிகளில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன.

நஜீப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த பணத்தினை போலீசார் கணக்கிட்டுள்ளனர். இது தொடர்பாக நேற்று நிரூபர்களை சந்தித்த காவல்துறை அதிகாரி அமர்சிங் கூறுகையில், “ முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.195 கோடியாகும். இந்த சோதனையின்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 35 பைகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 37 பைகளில் விலை உயர்ந்த நகைகள், கை கடிகாரம் உள்ளிட்டவை இருந்தன. 284 பெட்டிகளில் ஆடம்பர கை பைகள் கைப்பற்றப்பட்டது. மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் 150 கைபைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...