×

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விருப்பம் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருக்க வேண்டும்

வாஷிங்டன்: ‘தென் கிழக்கு மற்றும் தென் மத்திய ஆசியாவில் டிரம்ப் நிர்வாகம் செய்ய நினைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமெனில், இந்தியா நமது நெருங்கிய நட்பு நாடாக இருக்க வேண்டும்’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், செனட் உறுப்பினர் கிறிஸ் கூன்ஸ், இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அளித்த பதில்: நாம் செய்யும் பணிகள் இந்தியாவை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், தென் மத்திய மற்றும் தென் கிழக்கு ஆசியா விவகாரங்களை குறிப்பிட்டு கூற முடியும். இந்தியா நமது நெருங்கிய நட்பு நாடாக இருந்தால் மட்டுமே, தென் கிழக்கு  மற்றும் தென் மத்திய ஆசியாவில் நாம் செய்ய நினைக்கும் பணிகளை நம்மால் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவுடான உறவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்தாண்டு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இணைந்து எடுத்த முடிவின்படி, இரு நாட்டு உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இம்முறை நானும், பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த சந்திப்புக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எதிரி நாடுகள் தடை சட்டத்தில் விலக்கு?
அமெரிக்காவுக்கு எதிரான செயல்படும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, டிரம்ப் நிர்வாகம், எதிரிகளை எதிர்க்கும் சட்டத்தை (சிஏஏடிஎஸ்ஏ) கொண்டு வந்துள்ளது. இந்த பட்டியலில்  ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஒப்பந்தங்களை செய்யும் நாடுகளையும் அமெரிக்கா தனது எதிரியாக கருதி, பொருளாதார தடைகள் விதிக்க வழிவகை செய்துள்ளது.
 இச்சட்டம் வருவதற்கு முன்பாகவே, ரஷ்யாவிடம் இருந்து அதிநவீனமான, ‘எஸ்-400 டிரையம்ப் ஏவுகணை’களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ பேசுகையில், ‘‘எதிரிகளை எதிர்க்கும் சட்டத்தால் இந்தியா போன்ற நட்பு நாடுகள் பாதிக்கப்படக் கூடாது. அந்நாடுகளுக்கு விலக்கு அளிக்க நாடாளுமன்ற எம்பி.க்கள் துணை நிற்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...