×

டிரம்ப் முடிவு எதிர்பாராதது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச தயார்: வடகொரியா அறிவிப்பு

சியோல்: எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அணு குண்டு சோதனை நடத்திய வடகொரியா மீது ஐநா உள்பட உலக நாடுகள் பொருளாதார தடை விதித்தன. மேலும் அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மூளும் சூழல் உருவானது. பதற்றத்தை தணிக்க சீனா களம் இறங்கி வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் வடகொரியா அதிபர் கிம் ஜங் உன் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தென்கொரியா சென்ற அவர் அந்த நாட்டு அதிபர் மூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சிங்கப்பூரில் ஜூன் 12ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா சார்பில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வடகொரியா சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்தது. இது தொடர்பாக அதிபர் கிம் ஜங் உன்னுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தயாராக இருப்பதாக வடகொரியா நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சர் கிம் கியு வான் கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்பின் இப்படிப்பட்ட  முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க முடிவு. ஆனால், எங்கள் தரப்பில் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், நேருக்கு நேர் அமர்ந்து பேச வேண்டும். இதற்காக  எப்போது வேண்டும் என்றாலும் அமெரிக்கா வரலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஏனெனில், எங்கள் தலைவர் (கிம் ஜங் உன்) அமெரிக்க அதிபருடனான சந்திப்பு ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். அதற்காக பல தயாரிப்புகளில் அவர் ஈடுபட்டு இருந்தார். பேச்சுவார்த்தையை ரத்து செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன் கூட அணு ஆயுத சோதனை மையத்தை அவர் முற்றிலும் அழித்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.

கிம் பலவீனமான தலைவர் இல்லை
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை வடகொரியா சென்று அதிபர் கிம் ஜங் உன்னை சந்தித்து பேசியுள்ளார். அவர் பற்றி மைக் பாம்பிபோ கூறுகையில், ‘‘வடகொரியா அதிபரை இரண்டு முறை சந்தித்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருக்கிறேன். அவர் ஒன்றும் பலவீனமான தலைவர் இல்லை. வடகொரியாவை மிகச்சிறந்த முறையில்  அவர் வழிநடத்தி வருகிறார்’’ என்றார்.

அதிர்ச்சி அளிக்கிறது: தென்கொரியா அதிபர்
அமெரிக்கா-வடகொரியா பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் உடனடியாக தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் வடகொரியாவுடன் எங்கள் பேச்சுவார்த்தை தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல்ல, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஜப்பான் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் தென் கொரியா இணக்கமாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளது.

ஜூன் 12ல் பேச்சுவார்த்தை நடக்கலாம்: டிரம்ப்
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கொரியாவில் இருந்து மார்ச் 8ல் வெள்ளை மாளிகை வந்த ஒரு குழு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசியது. அப்போது, அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையை தொடங்கப்போவதாக கிம் ஜங் உன் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், புதிய சோதனை எதையும் நடத்தப்போவது இல்லை என்றும், தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ பயிற்சியை எதிர்க்கப்போவது இல்லை என்றும் அவர்கள் அறிவித்தனர். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை அவர்களே உடைத்து விட்டனர். சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை இரண்டாம் முறையாக கிம் ஜங் உன் சந்தித்த பிறகுதான் இத்தனை மாற்றங்களும் நடந்தன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பேசத்தயார் என்ற வடகொரியாவின் அறிவிப்பு வந்ததும் அமெரிக்காவின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 12ல் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...