×

ஆல் ரவுண்டராக அசத்தினார் ரஷித் கான்.....பைனலுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: சென்னையுடன் நாளை மோதல்

கொல்கத்தா: நைட் ரைடர்ஸ் அணியுடனான குவாலிபயர் 2 ஆட்டத்தில், 13 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் டி20 தொடர் 11வது சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீசியது. சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்ரகளாக விருத்திமான் சாஹா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 56 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். தவான் 34 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன் மட்டுமே எடுத்து குல்தீப் சுழலில் விக்கெட் கீப்பர் கார்த்திக் வசம் பிடிபட்டார்.
சாஹா 35 ரன் (27 பந்து, 5 பவுண்டரி) எடுத்து சாவ்லா சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட, ஐதராபாத் அணி 84 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் - தீபக் ஹூடா ஜோடி ஸ்கோரை உயர்த்த போராடியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஷாகிப் ஹசன் 28 ரன் எடுத்து (24 பந்து, 4 பவுண்டரி) ரன் அவுட்டாக, ஹூடா 19 ரன் எடுத்து நரைன் சுழலில் சாவ்லா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

யூசுப் பதான் 3 ரன், பிராத்வெயிட் 8 ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 138 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. 150 ரன்னை எட்டுவதே சந்தேகம் எனத் தோன்றிய நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் ரஷித் கான் அதிரடியாக பவுண்டரி, சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்தினார். பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிர்பாராத ஜாக்பாட்டாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய புவனேஷ்வர் குமார், அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து ரஷித் கானுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் விளாசித் தள்ள, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் ஐதராபாத் அணிக்கு 24 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ரஷித் கான் 34 ரன் (10 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), புவனேஷ்வர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 2, சாவ்லா, நரைன், மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவரில் 40 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. சுனில் நரைன் 26 ரன் (13 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சித்தார்த் கவுல் வேகத்தில் பிராத்வெயிட் வசம் பிடிபட்டார். அடுத்து கிறிஸ் லின் - நிதிஷா ராணா இருவரும் 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 47 ரன் சேர்த்தனர். கொல்கத்தா அணி 8.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன் சேர்த்து வெற்றிப் பாதையில் பயணித்தது.
இந்த நிலையில், ராணா 22 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டாக, அடுத்த வந்த உத்தப்பா 2 ரன் மட்டுமே எடுத்து ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டானார். கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 ரன் எடுத்து ஷாகிப் அல் ஹசன் சுழலில் வெளியேற, உறுதியுடன் விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ் லின் 48 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, ரஷித் கான் சுழலில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி திக்கு தெரியாமல் திகைத்தது.

அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸலையும் 3 ரன்னில் வெளியேற்றிய ரஷித் கான், சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கையூட்டினார். கடைசி 2 ஓவரில் 30 ரன் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பானது. 19வது ஓவரின் முதல் பந்தில் சாவ்லாவை (12 ரன்) வெளியேற்றினார் கவுல். அந்த ஓவரின் கடைசி பந்தில் கில் சிக்சர் விளாச, கடைசி ஓவரில் 19 ரன் தேவை என்ற திக்.. திக்.. நிலை ஏற்பட்டது. பிராத்வெயிட் வீசிய முதல் பந்தில் மாவி பவுண்டரி அடிக்க டென்ஷன் அதிகரித்தது. அடுத்த பந்தில் மாவி (6) டீப் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த ரஷித் கானிடம் பிடிபட, சன்ரைசர்ஸ் ஆர்ப்பரித்தனர். அடுத்த பந்து அப்படியே ஆக்‌ஷன் ரீப்ளேவாக அமைய, ஷுப்மான் கில் பெவிலியன் நோக்கி தளர்நடை போட்டார். அடுத்த 3 பந்தில் 1 ரன் மட்டுமே கிடைக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து தோற்றது. ரஷித் கான் 3 விக்கெட் (4-0-19-3), கவுல், பிராத்வெயிட் தலா 2, ஷாகிப் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருந்த ஐதராபாத் அணி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து கம்பீரமாக பைனலுக்கு முன்னேறியது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் மோதுகிறது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்…