×

மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பரிமாற்றம் அமைச்சருக்கு கைமாறியதா என சந்தேகம்

கோவை: கோவை அவிநாசி ரோடு நீலம்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 750 பெண்களுக்கும் கணக்கு உள்ளது. இவர்கள் அவ்வப்போது வங்கியில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தவணை முறையில் கடனை திரும்ப செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்களின் பாஸ்புக்கில் இருப்பு தொகை அச்சிட்டு தரப்படவில்லை. வங்கியில் கேட்ட போது, இயந்திரம் பழுது, நாளை வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி திருப்பி அனுப்பி வந்தனர்.

சந்தேகம் அடைந்த மகளிர் சுய உதவி குழுவினர்அனைத்து பாஸ் புத்தகங்களையும் எடுத்து சென்று ஓராண்டுக்கு வரவு, செலவுகளை பதிவு செய்து தரும்படி வற்புறுத்தினர். அதன்பிறகு, பாஸ் புத்தகத்தில் பணம் போட்டது, எடுத்தது போன்ற விபரங்கள் பதிவு செய்து தரப்பட்டது.அதைவாங்கி பார்த்த போது கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஒவ்வொருவரது கணக்கிலும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை செலுத்தப்பட்டது தெரியவந்தது. கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் இரண்டு நாளில் வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கு குறித்த விவரம் பதிவு செய்யப்படவில்லை. பண்ட் டிரான்ஸ்பர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் வங்கி கணக்குகளை வைத்துக் கொண்டு சுமார் ரூ.100 கோடி அளவுக்கு யாருக்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தலைமையில் மக்கள், வங்கி கிளை மேலாளரிடம் சென்று கேட்டனர். அப்போது, உங்களுக்கு எப்படி தெரியாமல் பணம் வந்ததோ, அதே போல் தெரியாமல் போய்விட்டது. இதை பெரிய பிரச்னையாக எடுத்து கொள்ள வேண்டாம். இதுசம்பந்தமாக வருமான வரி பிரச்னை உங்களுக்கு வந்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன். பெரிய இடத்து விவகாரம், இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறியுள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.100 கோடி வரையிலான தொகை யாருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது, முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சருக்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வங்கி உயரதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், போலீசார் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...