×

ஆதார் கார்டுடன் வந்து டிக்கெட் பெற்றால் ஏழுமலையானை பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையொட்டி சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்படுகின்றனர்.கடந்த 3ம்தேதி முதல் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்தை விரைவாக செய்யும் வகையில் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டது. இவ்வாறு டிக்கெட் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தின்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அந்த டிக்கெட் பெற்றவர்களும் சுமார் 2,  3 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை தற்போது உள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனை தவிர்க்க இலவச தரிசன திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இலவச தரிசன பக்தர்களுக்கு சனிக்கிழமை (நாளை) நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள ‘நேரம் நிர்ணயித்த டிக்கெட் வழங்கும்’ கவுன்டர்களில், டிக்கெட் வழங்கப்பட்டு, அதே நாளில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியதாவது: இலவச தரிசனத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு ‘நேர ஒதுக்கீடு டிக்கெட்’ வழங்கி அதன் மூலம் அதே நாளில் தரிசனம் செய்து வைக்கும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 17 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு அதே நாளில் தரிசனம் செய்து வைக்கப்படும்.

எனவே இந்த டிக்கெட்டுகளை ஆதார் கார்டோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ காண்பித்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். தினமும் அதிகாலை 12 மணி முதல் அந்தந்த நாட்களில் ஒதுக்கப்பட்ட டிக்கெட்  வழங்கப்படும். இந்த டிக்கெட் இல்லாமல் இலவச தரிசனத்தில் தரிசனம் செய்ய திருமலையில் உள்ள லேபாக்சி சந்திப்பில் இருந்து வரிசையில் அனுமதிக்கப்பட்டு  தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3.51 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 895 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் 21 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.3.51 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...