×

நாட்டை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடியில் வரும் 27-ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக தலைமை செயலாளர் அறிக்கை அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் அறிக்கை விபரங்களை வெளியிட முடியாது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக அரசின் அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்கக் கூடாது எனக்கோரி தூத்துக்குடி  அருகேயுள்ள குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து ஆலையை முற்றிலும் மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, சில்வர்புரம் உள்ளிட்ட 17 இடங்களில் போராட்டம் நடந்தது.போராட்டத்தின் 100வது நாளான கடந்த 22ம் தேதி போராட்டக் குழுவினர் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இது  தொடர்பாக அப்போைதய கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன் ஆகியோர் நடத்திய  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு  பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு 2  ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல அலுவலகங்கள் தீக்கிரையாகின. அப்போது போலீசார் எந்திர துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர். இதில் முதல் நாளே 2 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 2ம் நாளாக அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில்  ஒருவர் பலியானார். சிகிச்சையிலிருந்த மேலும் 2 பேர் இறக்கவே பலி எண்ணிக்கை 13 ஆனது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட...