×

கர்நாடக பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு வெற்றி

பெங்களூரு; கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். குமாரசாமிக்கு ஆதரவாக 117 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக மதசார்பற்ற ஜனதா தள தலைவரான குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன், கர்நாடக முதலமைச்சராக கடந்த புதன்கிழமை பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தபோதிலும், சட்டப்பேரவையில் குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்காக குமாரசாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. மஜத-காங்கிரஸ் இடையே உள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் சபாநாயகர் பதவியானது காங்கிரஸை சேர்ந்த ரமேஷ்குமாருக்கு தான் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மஜத கட்சியும் முழுமனதாக ஒப்புக்கொண்டது. அதன்படி சபாநாயகர் பதவிக்கு ரமேஷ்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியும் இந்த பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பாஜகவை சேர்ந்த சுரேஷ்குமாரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பாஜக சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து கே.ஆர்.ரமேஷ்குமார் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக, தற்காலிக சபாநாயகர் போப்பையா அறிவித்தார். சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட ரமேஷ்குமாருக்கு குமாரசாமி, எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா அவையில் சிறிது நேரம் உரையாற்றினார். அவர் பேசிய பிறகு பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள், அவர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே வெளிநடப்பு செய்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குமாரசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை...