×

4வது நாளாக தூத்துக்குடியில் பதற்றம் தொடர்கிறது: இயல்பு நிலை திரும்பாததால் பொதுமக்கள் தவிப்பு

தூத்துக்குடி: இயல்பு நிலை திரும்பாத நிலையில் தூத்துக்குடியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தான் அமைதி பேரணி நடைபெற்றது. அந்த அமைதி பேரணியில் வன்முறை சம்பவமும் நடைபெற்றதை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் போலீசார் ஈடுபட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 7 பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உடல்களை பதப்படுத்தியும் மருத்துவ துறை நிர்வாகம் மருத்துவ துறையில் வைத்துள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடியை பொறுத்தவரை இயல்பு நிலை என்பது படிப்படியாக திரும்புவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம், அதேபோன்று ஆங்காங்கே பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீ வதை்து எரிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் தான் காணப்பட்டது. நேற்றும், அதே போன்று இன்றும் இயல்பு வாழ்க்கை சற்று திரும்பியதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு தெருக்களிலும் போலீசார் 15 முதல் 20 பேர் வரை காவலில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததின் காரணமாக இயல்பு நிலை திரும்புவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் ஸ்டெலைட் ஆலையை மூடுவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். முறையான அறிவிப்பை வெளியிடாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற கருத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து வரும் மக்கள், இந்த 3 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தில் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதாவது கடைகள் அனைத்தும் அடைத்துள்ளதால் அன்றாட தேவைக்கான பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இருந்தபோதும் ஸ்டெர்லைட் ஆலை என்பது தூத்துக்குடி மக்களுக்கு தேவையில்லை என்ற ஒரு உணர்வுப்பூர்வமான கருத்தினை முன் வைத்து தான் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது படிப்படியாக திரும்பினாலும், நிச்சயமாக 13 பேரின் உடல்களை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மற்றும் போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஒரு சில இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள சுமார் 15 தெருக்களிலும் 15 முதல் 20 போலீசார் காவலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிநிலவரங்கள் பற்றி தெரியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு