×

தலைமைச்செயலகம் போர்க்களம் ஆனது கோட்டை முன் ஸ்டாலின் மறியல்: திமுக, காங் எம்எல்ஏக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை: தூத்துக்குடி சம்பவம் குறித்து முறையிட சென்ற மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் முதல்வர் அறை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். பின்னர், நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து தலைமை செயலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியதால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், தலைமை செயலகம் மற்றும கோட்டை முன் போர்க்களமாக காட்சி அளித்தது. வரும் 29ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்த அலுவல் ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டம் தொடங்கியதும் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் கே.ஆர்.ராமசாமியும் வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பின்னர், அவரது அறையில் கூடியிருந்த திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர், சேகர்பாபு உள்ளிட்டோருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்ததும், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் தலைமை செயலகத்தின் முதல் மாடியில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறையை நோக்கி சென்றனர்.  அவர்களது பின்னால் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் சென்றனர்.

ஆனால், பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராமேன்கள் யாரையும்  அவர்களுடன் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. நேராக, தலைமை செயலகத்தின் முதல் மாடியில் உள்ள முதல்வர் அறைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் அவரது அலுவலகத்தில் இல்லை. முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் எம்எல்ஏக்கள் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

இதையடுத்து போலீசார்  மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக 4வது நுழைவு வாயில் வரை தூக்கி வந்தனர். அவரை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி பின்தொடர்ந்து வந்தனர். மு.க.ஸ்டாலின் 4வது நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், திமுக எம்எல்ஏக்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஸ்டாலின் தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்தி வந்த அதே நேரம், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட திமுக எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்தின் 10வது நுழைவு வாயில் வழியாக திடீரென வெளியேறி வந்தனர்.  அவர்களை கைது செய்ய போலீஸ் வாகனங்களும் தலைமை செயலக வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

போலீஸ் வாகனத்தை பார்த்ததும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் போலீஸ் வாகனத்தில் ஏறுவதுபோல் சென்றனர். போலீசாரும், பிரச்னை இல்லாமல் அவர்களை கைது செய்துவிடலாம் என்று நினைத்தனர். ஆனால், யாரும் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் ஊர்வலமாக தலைமை செயலக வளாகத்தில் இருந்து பிரதான நுழைவு வாயில் வழியாக வெளியே சென்று கோட்டை முன் உள்ள ராஜாஜி சாலைக்கு சென்றனர். அங்கு அப்படியே சாலையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.   ஸ்டாலின் சாலைமறியல் செய்வதை பார்த்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் அவருடன் சேர்ந்து சாலைமறியல் செய்தனர். பேட்டரியால் இயங்கக்கூடிய ஸ்பீக்கர் பாக்ஸ் மூலம் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

 இந்த சம்பவத்தையொட்டி கோட்டை முன் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ராஜாஜி சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. தொண்டர்கள் தடுப்புகளை அகற்றி தலைமை செயலகம் நோக்கி ஆவேசமாக படையெடுத்தனர்.  மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினிடம் போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், கே.ஆர்.ராமசாமி மற்றும் திமுக எம்எல்ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுவிக்க கோரியும் திமுக தொண்டர்கள் அந்த வேனை செல்லவிடாமல், தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் அதிகளவில் குவிந்து இருந்ததால் போலீசார் கூட்டத்தை கலைக்க முடியாமல் திணறினர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு, மு.க.ஸ்டாலின் ஏற்றப்பட்ட வேனை போலீசார் இன்ச் இன்ச்சாக கோட்டை முன் இருந்து நகர்த்தினர்.  போலீஸ் வாகனம் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே சென்றபோது, தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சேகர்பாபு எம்எல்ஏ தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தி செல்ல உதவினார்.  பின்னர் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் இருந்த  மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘என் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் அரசு போடட்டும். அங்கு குண்டடிபட்டு இறந்திருக்கிறார்கள். அதே போலீசார் என்னை நோக்கி சுட்டால்கூட மக்களுக்காக நெஞ்சை நிமிர்த்தி காட்ட தயாராக உள்ளேன். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என்றார்.

தர்ணா... வெளியேற்றம்... மறியல்... கைது...
காலை 10.45: மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் வந்தார்.
10.50: எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
11:00: சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது.
11.05: தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.
11.15: எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை.
11.20: மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அறைக்கு சென்றார் அப்போது, 100க்கும் மேற்பட்ட போலீசார் பின் தொடர்ந்தனர்.
11.25: முதல்வர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா.
11.30: மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு வந்து போலீசார் கீழே விட்டனர்.
11.40: தலைமை செயலகத்தின் 4வது கேட் முன்பு போராட்டம்.
11.55: மு.க.ஸ்டாலின், எம்எல்ஏக்கள் கோட்டை முன் சாலைமறியல்.
12.05: மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது.
12.10: திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கோட்டை முன் ராஜாஜி சாலையில் போராட்டம்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...