×

கிரிக்கெட் வீரர் கோஹ்லி சவாலை ஏற்ற பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி விடுத்த சவாலை ஏற்ற பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சவால் விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பிரதமர் மோடிக்கு உடற்பயிற்சி, உடல் தகுதி தொடர்பான சவாலை விடுத்துள்ளார். இதை மோடி ஏற்றுள்ளார். இந்த நிலையில், மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் எரிபொருள் சவால் ' என்ற தலைப்பில் ஒரு சவாலை விடுத்துள்ளார். அதில் அவர், ‘அன்பான பிரதமர் அவர்களே, விராட் கோஹ்லியின் உடல்தகுதி சவாலை ஏற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் உங்களுக்கு ஒரு சவாலை விடுக்கிறேன்.

எரிபொருள் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பதே அந்த சவால் அல்லது காங்கிரஸ் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு எரிபொருள் விலையை குறைக்க செய்யும். இது குறித்து உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில், ‘11வது நாளாக  எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் அது பற்றி பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறீர்கள். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் ரூ.10 லட்சம் கோடி பணம் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. எனவே, எரிபொருள் விலையை குறைத்து பொதுமக்களின் பொருளாதார தகுதியை மீட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து உதவுங்கள். விவசாயிகளின் விலை பொருட்களுக்கு தாங்கள் உறுதியளித்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தும் உதவுங்கள்’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ஷா தனது டிவிட்டர் பதிவில் தனது கல்வித்தகுதி சான்றிதழை பதிவிட்டு மோடிக்கு ஒரு சவாலை விடுத்துள்ளார். அதில் அவர், ‘அன்பான மோடி அவர்களே... என்னுடைய பிஏ, எம்ஏ, எம்பிஏ ஆகிய பட்டப்படிப்பு சான்றிதழ்களை இங்கே பதிவிட்டுள்ளேன். தாங்கள் பட்டப்படிப்பு குறித்த சவாலை ஏற்க தயாரா? இது தொடர்பாக உங்கள் பதிலை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக மோடிக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடந்த 2016ல் அமெரிக்காவின் ஒர்லாண்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த தாங்கள், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 ேபர் கொல்லப்பட்டது குறித்து மவுனம் காப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்