×

ரூ.13,000 கோடி வங்கி கடன் மோசடி நீரவ் மோடி மீது குற்றப்பத்திரிகை : அமலாக்கத் துறை தாக்கல்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த நகை வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது  கூட்டாளிகள் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.  குஜராத்தை சேர்ந்த பிரபல வைர நகை  வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் போலி உத்தரவாத கடிதங்களை  பெற்று, தேசிய வங்கிகளில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. அவர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யும்  முன்பே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டனர். நீரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து ஏற்கனவே இரண்டு குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல்  செய்துள்ளது.

இந்நிலையில், நிதி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நீரவ் மோடி மற்றும் அவரது  கூட்டாளிகள் மீது 12 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. அதில் அமலாக்கத்துறை முடக்கிய நீரவ் மோடியின் சொத்து  விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்‌சி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கப் பிரிவு விரைவில் 2வது  குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!