×

தென் சீன கடலில் பதற்றத்தை ஏற்படுத்துவதால் பசிபிக் கூட்டு போர் பயிற்சியில் இருந்து சீன ராணுவம் நீக்கம்: அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்: தென் சீன கடல் பகுதியில் ஆயுதங்களை குவித்து பதற்றத்தை ஏற்படுத்துவதால், இந்தாண்டு நடைபெறும் பசிபிக் கூட்டு போர் பயிற்சியில் இருந்து சீன ராணுவத்தை அமெரிக்கா அதிரடியாக நீக்கியுள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது. இதற்காக, விமானத் தாங்கி கப்பல்கள், அதிநவீன ஏவுகணைகள், தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் கருவிகள் ஆகியவற்றை பல இடங்களில் நிறுத்தியுள்ளது. மேலும், ஸ்பரேட்லி தீவில் பிரமாண்டமான ராணுவ தளத்தை அமைத்து வருகிறது. இதனால், தென் சீன கடல் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை முறியடிக்கும் வகையில், அமெரிக்காவும் தனது விமானந் தாங்கி கப்பலை இந்த கடல் பகுதிக்கு அடிக்கடி அனுப்பி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

இந்நிலையில், பசிபிக் கடலில் ஆண்டுதோறும் அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாட்டு கடற்படைகள் பங்கு பெறும் பசிபிக் கூட்டு போர் பயிற்சி நடத்தப்படுவது வழக்கம். தென் சீன கடல் பகுதியில் சீனா போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தாண்டு போர் பயிற்சியில் இருந்து சீனாவை அமெரிக்கா அதிரடியாக நீக்கியுள்ளது. இது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவம் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், தரையில் இருந்து விண்ணில் பாயும் ஏவுணைகள் போன்றவற்றை நிறுத்தியுள்ளது. மேலும், இந்த கடல் பகுதியில் தகவல் தொடர்பை கணகாணிக்கும் கருவிகளையும், தகவல் தொடர்பை முறியடிக்கும் எலெக்ட்ரானிக் ஜாமர் கருவிகளையும் நிறுவியுள்ளது. ஸ்பரேட்லி தீவில் ராணுவ தளம் அமைக்கிறது. இதற்கெல்லாம் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. சீனாவின் இந்த செயலால், தென் சீன கடல் பிராந்தியத்தில் பதற்றத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சரும், சீன அரசின் பிரதிநிதியுமான வாங் யி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுடன் வெள்ளை மாளிகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, சீனா மீது அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
வாங் யி கூறுகையில், ‘‘அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் எந்த பலனும் இல்லை. இது ஆக்கப்பூர்வமான முடிவு அல்ல. இரு நாட்டு உறவுக்கு பயன் அளிக்கக் கூடியதல்ல. ஸ்பரேட்லி தீவில் மக்கள் நலன் பயன்பாட்டுக்கான வசதிகளை மட்டுமே சீனா உருவாக்கி வருகிறது. அதே நேரம், தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நாட்டுக்கும் உரிமை உள்ளது. அதன் அடிப்படையில், தென் சீன கடல் பகுதியின் சில இடங்களில் குறைந்தப்பட்ச ராணுவ வசதிகளை சீனா அமைத்துள்ளது. பசிபிக் கூட்டு போர் பயிற்சியில் இருந்து சீனாவை நீக்கும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

அமெரிக்கர் மீது ஒலி தாக்குதல்
சீனாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக அலுவலகங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் அமெரிக்க ஊழியர் மீது ‘ஒலி தாக்குதல்’ நடத்தப்பட்டதற்கான அறிகுறி காணப்படுகிறது. இவர் தனக்கு அசாதாரணமான முறையில் தொடர்ந்து சத்தம் கேட்டு வருவதாகவும், இதனால் மூளையில் கடுமையான அழுத்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், சீனாவில் பணியாற்றும் தனது நாட்டு ஊழியர்களை உஷாராக இருக்கும்படி அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...