×

பைனலில் நுழைவது யார்?: சன்ரைசர்ஸ்-நைட் ரைடர்ஸ் இன்று பலப்பரீட்சை

* குவாலிபயர்-2 போட்டி இரவு 7 மணிக்கு தொடக்கம்

கொல்கத்தா: ஐபிஎல் டி20 தொடரில் பைனலுக்கு முன்னேறும் 2வது அணிக்கான குவாலிபயர்-2 மோதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. விறுவிறுப்பான இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் டி20 சீசன்-11 தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் 2 இடங்களை பிடித்த சன்ரைசர்ஸ் - சூப்பர் கிங்ஸ் அணிகள் குவாலிபயர்-1 சுற்றில் மோதின. இதில் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்திய நைட் ரைடர்ஸ் அணி பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில், சூப்பர் கிங்சுடன் பைனலில் மோதப் போகும் 2வது அணியை தேர்வு செய்வதற்கான குவாலிபயர்-2 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில், சன்ரைசர்ஸ் - நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நைட் ரைடர்சை பொறுத்த வரையில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களும், ஆல் ரவுண்டர்களுமே பலம். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா சுழலில் அசத்துகின்றனர். ஆல் ரவுண்டரான ரஸ்ஸல் முக்கிய பங்காற்றுகிறார். பேட்டிங்கில் அதிகமாக ரஸ்ஸலையே அந்த அணி நம்பியிருக்கிறது. ஆல் ரவுண்டர் சுனில் நரைனும் அவ்வப்போது அதிரடியாக ஆடி மிரட்டுகிறார். கிறிஸ் லின், ரானா, சுபம் கில் ஆகிய பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு போட்டியிலும் பொறுப்புணர்ந்து விளையாடி வருகிறார். அதிரடி வீரர் உத்தப்பா இந்த சீசனில் இதுவரை பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

சன்ரைசர்ஸை பொறுத்த வரையில், லீக் சுற்றின் முதல் போட்டியில் இருந்தே பிரமாதமாக விளையாடி வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. பேட்டிங்கை விட பந்துவீச்சில் பலம் பொருந்திய அணியாக வலம் வருகிறது. ரஷித்கான், ஷாகிப் அல் ஹசன் சுழலில் பட்டையை கிளப்புகின்றனர். சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, புவனேஸ்வர் குமார் வேகத்தில் அசத்துகின்றனர். பிராத்வெயிட் ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார். பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் அசத்தி வருகிறார். விளாசல் ஆட்டத்திற்கு தவான், யூசுப் பதான், பிராத்வெயிட் ஆகியோர் உள்ளனர்.

மணீஷ் பாண்டே, கோஸ்வாமி, ஷாகிப் அல் ஹசன் போன்றவர்களும் கைகொடுத்தால் இமாலய ஸ்கோரை எட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் பட்சத்தில், நைட் ரைடர்ஸை விட சன்ரைசர்ஸ் பலம் பொருந்திய அணியாக உள்ளது. கொல்கத்தா மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சன்ரைசர்ஸ் அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதே நேரத்தில் உள்ளூரில் களமிறங்குவதால், நைட் ரைடர்ஸ் கடும் போட்டியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றைய ஆட்டத்தில் கடைசி பந்து வரை விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

‘ஈடனில் ஆடுவது ரொம்ப கஷ்டம்’
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், ‘‘குவாலிபயர்-1 போட்டியை சன்ரைசர்ஸ் அணி மும்பையில் விளையாடியது. அந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. ஆனால், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் முழுக்க முழுக்க சுழலுக்கு சாதகமானது. மும்பையில் விளையாடிவிட்டு, உடனே இங்கு ஆடுவது ரொம்பவும் கடினமாக இருக்கும். உள்ளூர் என்பதால், எங்களால் எளிதாக இங்கு விளையாட முடியும். கடைசி 4 போட்டியில் அவர்கள் தோற்றிருப்பதும், நாங்கள் கடைசி 4 போட்டியில் வெற்றி பெற்றிருப்பதும் பெரிய விஷயமல்ல. முந்தைய முடிவுகளை நாங்கள் கணக்கில் கொள்வதில்லை. அடுத்த போட்டியில் ஜெயிக்க வேண்டுமென்பதே எங்கள் இலக்கு’’ என்றார்.

நேருக்கு நேர்...
நடப்பு சீசனில் லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய இரு போட்டியில் தலா 1 வெற்றியை பெற்றுள்ளன. கொல்கத்தாவில் நடந்த போட்டியில் சன்ரைசர்சும், ஐதராபாத்தில் நடந்த போட்டியில் நைட் ரைடர்சும் வெற்றி பெற்றுள்ளன. சன்ரைசர்ஸ் கடைசியாக விளையாடிய 4 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு முன் விளையாடிய 6 போட்டியில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய 4 போட்டியில் வெற்றியை தட்டிச் சென்றுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு