×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக அமைதியாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக, துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை பரிதாபமாகவும், கடுகளவும் மனித நேயமின்றி சுட்டுக் கொன்ற அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொன்றுள்ளனர்.இதன் பிறகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ, அமைச்சர்களோ இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவோ, தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன் வராமல் தனியார் ஸ்டெர்லைட் ஆலையின் நலன்களுக்காக தூத்துக்குடியையே போர்க்களமாக்கி, பொதுமக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் அதிமுக அரசின் மீது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் இருக்கிறார்கள்.ஆகவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், அதிமுக அரசின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள விபரீதமான துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூட வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாக தோற்றுவிட்ட அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த முழு அடைப்பில் அனைத்துத் தர மக்களும் பங்கேற்று வெற்றிகரமாகவும், அதே நேரத்தில் ஜனநாயக வழியில் அமைதியாகவும் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...