×

வேதாரண்யத்தில் செங்கல் உற்பத்தி தீவிரம் : விற்பனை இல்லாததால் உற்பத்தியாளர்கள் அவதி

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் செங்கல் உற்பத்தி தீவிரமாக நடக்கிறது. தற்போது விற்பனை இல்லாததால் உற்பத்தியாளர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், மருதூர், கரியாப்பட்டினம், நாகக்குடையான், வடமழைமணக்காடு, பிராந்தியங்கரை, மூலக்கரை, வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. செங்கல் தயாரிக்கும் பணிக்கு ஆற்றுப்பாசன பகுதியில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு செங்கல் தயாரிப்பு நடைபெறுகிறது. கடும் கோடையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சென்ற ஆண்டு அளவு செங்கல் உற்பத்தி செய்ய முடியவில்லை.

மேலும் செங்கல் தயாரிப்பிற்கு ஆற்று பகுதியில் இருந்து மண் எடுப்பது மிகுந்த பிரச்னையாக உள்ளது. தற்போது செங்கல் தயாரிப்பு பணியில் விறகு, ஆள்கூலி, மணல் ஆகியவை விலை ஏற்றத்தால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளை அமைப்பதற்கு பணம் செலுத்தி உரிமம் பெறவேண்டும் எனஅறிவித்துள்ளது. இதனால் செங்கல் செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் செலவாகும். பல சிரமங்களுக்கு இடையில் செங்கல் தயார் செய்தாலும் அதனை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். அதற்கு காரணம் தற்போது கட்டிடப்பணிக்கு ஆற்று மணல் (கலவை மணல்) கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. கலவை மணல் கிடைக்காததால் இப்பகுதியில் கட்டிட பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ற ஆண்டு விற்பனையாகாமல் செங்கல் தேக்கம் ஏற்பட்ட நிலையில் வேதாரண்யம் பகுதிக்கு தஞ்சை மாவட்டம் வலங்கைமானிலிருந்து செங்கல் விற்பனைக்கு வரும் காரணத்தாலும் இங்கு தயார் செய்யப்படும் செங்கல் விற்பனை செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது ஒரு செங்கல் ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் உற்பத்தி செலவிற்கு கூட கட்டுபடியாக வில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். செங்கல் விற்பனையாகாத காரணத்தினாலும் செங்கல் சூளை அமைப்பது இப்பகுதியில் பெருமளவில் குறைந்துள்ளது.

இதனால் விவசாயம் முடிந்தவுடன் மாற்றுத்தொழிலாக செங்கல் சூளை அமைத்து வருமானம் ஈட்டிவந்த இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கலவை மணல் கிடைப்பதில் தேக்க நிலையை அரசு சரி செய்தால் தான் இப்பகுதி செங்கல் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். எனவே அரசு கட்டிட வேலைகளுக்கு தாராளமாக மணல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என இப்பகுதி செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்