×

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கிய கலவரம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் 100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம்  மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தடையை மீறி போராட்டக் குழுவினர்   ஆயிரக்கணக்கானோர் நேற்று  முன்தினம் காலையில் தூத்துக்குடி பீச்ரோடு பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.  அவர்களை ஆங்காங்கே போலீசார் தடுத்தபோது  மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.

எனினும் போராட்டக் குழுவினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதனால் 3வது மைல் பைபாஸ் சாலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அங்கு  நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சிலர் தீவைத்து கொளுத்தினர். தொடர்ந்து  முன்னேறி சென்ற போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்தனர். அப்போது போலீசார் எந்திர துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். கலெக்டர் அலுவலகம், பைபாஸ் சாலை, திரேஸ்புரம் என மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி  சூடு மற்றும் தடியடியில் 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது. ஒரு வழியாக மாலை 4 மணிக்கு கலவரம் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை பார்க்கவும் உறவினர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு திரண்டு  வந்தனர்.

இதன் காரணமாக மருத்துவமனைக்கு வந்த  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார்  அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசார்  மீது கல்வீசி தாக்கினர். அப்போது திடீரென்று பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது.  இதனையடுத்து போலீசார் பாளை. ரோடு, விவிடி சிக்னல், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பொதுமக்கள் பிரயைண்ட் நகர், அண்ணாநகர், டூவிபுரம் பகுதிகளில் சிதறி ஓடினர். ஆனால் அவர்களை ஓட ஓட விரட்டி சென்று போலீசார் தடியடி நடத்தி தாக்கினர். அப்போது சில இடங்களில் இளைஞர்கள்  போலீசார் மீது கல்வீசி எதிர்தாக்குதல் நடத்தினர்.  

போலீசார் மீண்டும், ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கி சூடு நடத்தி அண்ணாநகர் 6வது தெரு வரை இளைஞர்களை  விரட்டினர். இந்த துப்பாக்கி சூட்டில் தாளமுத்துநகர் ஆசைதம்பி நகரை  சேர்ந்த காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானவர்கள்  எண்ணிக்கை  11 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தால் தூத்துக்குடி பிரையண்ட் நகரில் நின்றிருந்த போலீஸ் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.ஜெயராமன் என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குண்டடிபட்டு காயமடைந்தார். இவர் தூத்துக்குடி  அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!