×

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு எதிரொலி : தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை நொச்சிக்குப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்று வருவதால், பல்வேறு பகுதிகளில் சுமார் 3000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி  

தூத்துக்குடி விவிடி சிக்னலில், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பணியில் உள்ள நீதிபதி விசாரணை நடத்தி, முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடி மருத்துவமனையில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் மட்டுமே தங்க அனுமதிக்க முடியும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மதுரை

ஒத்தக்கடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேனி

கம்பம் சிக்னல் முன்பு தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் தமிழ் புலி கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம் பேருந்துநிறுத்தம் முன்பாக புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலைசிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான காவல்துறை, மாவட்ட ஆட்சியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும், முதல்வர் பதவி விலக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து கூடலூரில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்பாட்டம் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.

நெல்லை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் சுட்டுப் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை அருகேயுள்ள கூத்தங்குழி விலக்கில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சூளகிரி பழைய பேருந்து நிலையத்தில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி