×

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 2வது நாளாக காவல்துறையினர் இன்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்களில் சிலர் கற்களை வீசி  போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டின் போது காவல்துறையின் வரம்பு மீறிய, மிருகத்தனமான செயலை கண்டிப்பதாக கூறியுள்ளார். உளவுத்துறை உள்பட தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் தோல்வி அடைந்துவிட்டது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது. காவல்துறையினர் வரம்பு மீறி சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61...