×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு 18 கிராம மக்கள், மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65 பேர் காயமடைந்துள்ளனர். சாதாரண உடை அணிந்த காவலர் போலீஸ் வேனில் இருந்தபடி போராட்டக்காரர்களால் துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பையும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தாமல் தவிர்த்திருக்க முடியுமா என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து அறிக்கை அளிக்கமாறு கூறியுள்ளது. இதையடுத்து காவல்துறையிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...