×

ஐபிஎல் டி20 குவாலிபயர்-1ல் த்ரில் வெற்றி டுபிளெஸ்சி அபார அரைசதம் : பைனலில் நுழைந்தது சூப்பர் கிங்ஸ்

மும்பை : ஐபிஎல் டி20 சீசன் 11 தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கு எதிரான குவாலிபயர்-1 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய டுபிளெஸ்சி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசன் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான குவாலிபயர் 1 பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் பில்லிங்சுக்கு பதிலாக வாட்சன் இடம் பெற்றார். ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், வத்ஸ் கோஸ்வாமி களமிறங்கினர். சாஹர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தவான் டக் அவுட்டாகி வெளியேற ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் அதே ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி பதிலடி கொடுத்தார்.

கோஸ்வாமி 12 ரன் எடுத்து லுங்கி என்ஜிடி வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 24 ரன் (15 பந்து, 4 பவுண்டரி), ஷாகிப் அல் ஹசன் 12 ரன், மணிஷ் பாண்டே 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஐதராபாத் 69 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் யூசுப் பதான் - கார்லோஸ் பிராத்வெயிட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. நிதானமாக விளையாடிய பதான் 24 ரன் எடுத்து (29 பந்து, 3 பவுண்டரி) பிராவோ வேகத்தில் அவரிடமே பிடிபட்டார். 15 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 88 ரன் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் அதிரடியாக விளையாடிய பிராத்வெயிட் சிக்சர்களை பறக்கவிட்டு நம்பிக்கை அளித்தார். ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் அவர் 2 சிக்சர், 1 பவுண்டரி விளாசினார். புவனேஷ்வர் குமார் 7 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன் குவித்தது. கார்லோஸ் பிராத்வெயிட் 43 ரன்னுடன் (29 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் பிராவோ 2, சாஹர், என்ஜிடி, தாகூர், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் வாட்சன் டக் அவுட்டாகி வெளியேற, சன்ரைசர்ஸ் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.  அடுத்து வந்த ரெய்னா 22 ரன் (13 பந்து, 4 பவுண்டரி) விளாசி சித்தார்த் கவுல் வீசிய 4வது ஓவரின் 3வது பந்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஆரவார வரவேற்புடன் உள்ளே வந்த ராயுடு முதல் பந்திலேயே கிளீன் போல்டாகி வாத்து நடை போட்டார். பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிஎஸ்கே வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர். கேப்டன் டோனி (9 ரன், 18 பந்து), பிராவோ (7 ரன், 11 பந்து) இருவரும் ரஷித் கான் சுழலில் பெவிலியன் திரும்பினர். சென்னை அணி 11.2 ஓவரில் 57 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பரிதவித்தது. அடுத்து வந்த ஜடேஜா (3), சாஹர் (10) இருவரும் சந்தீப் ஷர்மா வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுமுனையில் துவக்க வீரர் டுபிளெஸ்சி வெற்றிக்காக தனி ஆளாக போராடினார். 17 ஓவர் வரை ஆட்டம் ஐதராபாத் கையில் இருந்த நிலையில், சித்தார்த் கவுல் வீசிய 18வது ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் டுபிளெஸ்சி. அந்த ஓவரில் 3 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி டுபிளெஸ்சி 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

இவருக்கு தாகூர் நல்ல ஒத்துழைப்பு தர கடைசி ஓவரில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியது. புவனேஸ்வர் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை டுபிளெஸ்சி சிக்சருக்கு பறக்க விட்டு சூப்பர் கிங்சுக்கு வெற்றி தேடித்தந்தார். சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. டுபிளெஸ்சி 67 ரன் (42 பந்து), தாகூர் 15 ரன்னுடன் (5 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணியின் ரஷித்கான், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா தலா 2 விக்கெட், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மோத உள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்..