×

மப்பேடு சாலையோரம் குப்பை எரிப்பதால் கண் எரிச்சல்: மக்கள் அவதி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தினசரி துப்புரவு ஊழியர்கள் டிரை சைக்கிள் மற்றும் டிராக்டர் மூலம் அகற்றி, மப்பேடு பகுதியில், ஆலப்பாக்கம் - பெருங்களத்தூர் சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் அடிக்கடி தீவைத்து எரிப்பதால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறுகிறது. மேலும், கண் எரிச்சல், சுவாசக் கோளாறில் சுற்றுப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குப்பையை கொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் முறையான இடம் தேர்வு செய்து, அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரிக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சாலையோரம் உள்ள காலி இடத்தில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால், இப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. மேலும், சுற்றுப் பகுதி மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்’ என்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...