×

காபி ஷாப், ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் களைகட்டும் ஹுக்கா பார் போதை நகரமாக மாறுகிறது சென்னை

சென்னை: சென்னை நகரில் காபி ஷாப், ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் பல இடங்களில் அனுமதியின்றி ஹுக்கா பார் களைகட்டுகிறது. ஹுக்கா புகைக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நள்ளிரவில் போதை மயக்கத்தில் தள்ளாடுகின்றனர். சென்னையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கவர்வதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் காபி ஷாப், ரெஸ்டாரன்ட், மிட் நைட் உணவகங்கள் இயங்கி வருகிறது. வண்ண விளக்குகளால் மின்னும் அறைகள், கேன்டில் நைட் டின்னர், மெல்லிசை பாடல்கள் என இளசுகளை இழுக்க பல்வேறு யுத்திகளை கடை உரிமையாளர்கள் கையாளுகின்றனர். அவ்வாறு, வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை ஹுக்கா என்ற போதைக்கு அடிமையாக்கி, அவர்களை சீரழிக்கும் பிரபல காபி ஷாப் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்கும் உரிமையாளர்கள், கண்கவர் விளக்குகளால் அலங்கரித்து, பல்வேறு சலுகைகளை வழங்கி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை இழுத்து போடுகின்றனர். இந்த விவரம் அறியாத சிலர், தங்களது குடும்பத்தினருடன் சென்று முகம் சுளித்தபடி திரும்பிச்செல்லும் நிலை தொடர்கிறது. போலீசாரின் அதிரடி சோதனையில் தொடர்ந்து ஒவ்வொருவராக சிக்கி வந்தாலும், ஹுக்கா விற்பனைக்கு விடிவு பிறக்கவில்லை.
குறிப்பாக, ரெஸ்டாரன்ட் என்ற போர்வையில் ஹுக்கா பார்களை வைத்துள்ளவர்கள்  பெரும்பாலானோர் குறைந்த வயது உள்ளவர்களே.

அவர்கள், தங்கள் கல்லூரி நண்பர்கள் மூலம் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளத்தில் ஒரு குழு அமைத்து விற்பனையை அமோகமாக நடத்துகின்றனர். இந்த ஹுக்கா பார் நகரின் மைய பகுதியான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, அடையாறு, இந்திராநகர், துரைப்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஓஎம்ஆர், மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால், போதை மயக்கத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் நள்ளிரவில் சாலையில் தள்ளாடும் அவலம் அரங்கேறுகிறது. இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு காபி ஷாப்பில் ஹுக்கா பார் நடத்தியதாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் லிங்கநாதன் (36). இவர் ஆழ்வார்பேட்டையில் ரூட் காபி ஷாப் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா பார் நடத்தி வருவதாக தேனாம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட காபி ஷாப்பை கடந்த சில தினங்களுக்கு முன் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கடைக்கு வாலிபர்கள் அதிகளவில் வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக காபி ஷாப்பிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, கடைக்குள் தடை செய்யப்பட்ட ஹுக்கா பார் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் லிங்கநாதனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து போதை பொருள் மற்றும் ஹுக்கா புகைக்க பயன்படுத்திய உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் நுங்கம்பாக்கத்தில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஹுக்கா பார் நடத்திய வாலிபர்களை போதைக்கு அடிமையாக்கியதாக கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல், இந்திராநகரில் உள்ள ஒரு காபி ஷாப்பில் ஹுக்கா பார் நடத்தி வந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தின் இந்தியா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் கையில் என்று கூறி வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையே சீரழிக்கும் ஹுக்கா, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைபொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹுக்காவை எப்படி பயன்படுத்துகின்றனர்?
ஹுக்கா என்பது போதைபொருளை புகைக்க பயன்படுத்தும் ஒரு கருவி. இதில், சீசா என்ற உபகரணம் இருக்கும். சீசாவின் கீழ் பகுதியில் ஒரு பைப் பொருத்தப்பட்டிருக்கும். மேல் வழியாக சீசாவில் தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர், அதன் மேல் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு வகையான பிளேவர்கள் ஊற்றப்படும். சீசாவின் மேல் பகுதியில் கரியை எரியவிட்டு இருப்பார்கள். கீழே உள்ள பைப் வழியாக உறியும்போது, அந்த பிளேவர் தண்ணீரில் கலந்து, ஆவியாகி வெளியேறும். பிளேவரில்தான் நிக்கோடின் உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளன. இதை பயன்படுத்தும் இளசுகள் போதை மயக்கத்தில் ஜாலியாக உலா வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...