×

கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம் புளியந்தோப்பு மாநகராட்சி பூங்காவில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை

பெரம்பூர்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக, புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி பூங்காவில் குப்பைகள் தரம் பிரித்து மலைபோல் கொட்டப்பட்டுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் பயன்படுத்த முடியாமல் பல மாதங்களாக மூடியே கிடக்கிறது.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் எதிரே புளியந்தோப்பு சாலையில், மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடுவதற்கும், முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் இந்த பூங்காவை பயன்படுத்தினர். இதற்கிடையில், வீடுகளில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அதில் திடக்கழிவு மேலாண்மை மூலம் உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, அப்பகுதியில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து, இந்த பூங்காவில் கொட்டி வைத்தனர். ஆனால், அதில் உரம் தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

வெயிலிலும், மழையிலும் குப்பை கிடப்பதால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டது, இதனால், அங்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி, அந்த பூங்காவுக்கு பூட்டு போட்டது. பல மாதங்களாகியும் இதுவரை, அந்த குப்பைகள் அகற்றவில்லை. பூங்காவும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மேலும், பூங்காவில் உள்ள குப்பைகள் காற்றில் பறந்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால், அவர்கள் விபத்து சிக்கி காயமடைந்து செல்கின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகம், பூங்காவில் கொட்டப்பட்டுள்ள, குப்பைகளை அகற்றி, வேறு இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி, மீண்டும் பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...