×

மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றம்: டேர்டெவில்ஸ் ஆறுதல் வெற்றி

புதுடெல்லி: டேர்டெவில்ஸ் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில், 11 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட் செய்தது. பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3 ஓவரில் 30 ரன் சேர்த்தது. ஷா 12 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். மேக்ஸ்வெல் 22 ரன் (18 பந்து, 4 பவுண்டரி), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, டெல்லி அணி 9 ஓவரில் 75 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், ரிஷப் பன்ட் - விஜய் ஷங்கர் ஜோடி அதிரடியாக விளையாடி 64 ரன் சேர்த்தது. ரிஷப் பன்ட் 34 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 64 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி குருணல் பாண்டியா பந்துவீச்சில் போலார்டு வசம் பிடிபட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. விஜய் ஷங்கர் 43 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), அபிஷேக் ஷர்மா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் குருணல், பூம்ரா, மார்கண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. சூரியகுமார், லூயிஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். சூரியகுமார் 12 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த இஷான் கிஷண் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த லூயிஸ் 48 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அமித் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போலார்டு 7, குருணல் 4, கேப்டன் ரோகித் ஷர்மா 13 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். ஹர்திக் பாண்டியா 27 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அமித் மிஷ்ரா சுழலில் பலியாக, மும்பை இந்தியன்சுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. எனினும், கடைசி கட்டத்தில் பென் கட்டிங் விடாப்பிடியாக போராட ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 ஓவரில் 23 ரன் தேவைப்பட்ட நிலையில், மார்கண்டே பந்துகளை வீணடித்தது மும்பை அணிக்கு நெருக்கடியை அதிரித்தது. அவர் 10 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்ட நிலையில், ஹர்ஷல் வீசிய முதல் பந்தை கட்டிங் சிக்சருக்கு தூக்கி நம்பிக்கை அளித்தார்.
எனினும், அடுத்த பந்தில் அவர் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் (37 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்). பூம்ரா முதல் பந்திலேயே டக் அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டைவிட்டது. டெல்லி பந்துவீச்சில் லாமிச்சேன், அமித் மிஷ்ரா, ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட், டிரென்ட் போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். அமித் மிஷ்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்