×

காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்காதவர்கள் டிஸ்மிஸ் ... திருநாவுக்கரசர்

சென்னை: ராகுல் காந்தி உத்தரவுப்படி காங்கிரஸ் நடத்தும் 3 கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்தால் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.  தமிழ்நாடு மீனவர் காங்கிரசின் மாநில செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மீனவரணி மாநில தலைவர் கஜநாதன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக கூறிய மோடி இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராகுல்காந்தி உறுதியளித்தபடி ஆட்சிக்கு வரும் போது உறுதியாக அமைப்பார். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டிய நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். அந்த தேர்தல் வரும் போது தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் வேகமாக செயல்பட வேண்டும். என்னை மாற்றப் போவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வரும் தேர்தலை எனது தலைமையில்தான் சந்திக்க போகிறோம். ராகுல்காந்தி இதுபற்றி பல ஆலோசனைகளை எனக்கு கூறியுள்ளார். மாவட்ட தலைவர்கள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை எந்த நிர்வாகியாக இருந்தாலும் காங்கிரஸ் நடத்தும் 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால், அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கலாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

திமுகவுக்கு அடுத்து காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. தற்போது திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.  திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. வரும் தேர்தலிலும் தொடரும். இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் தமிழகத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். கவர்னர் மீது ஏராளமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…