×

மதுரை மத்திய சிறையில் சந்தானம் குழுவினர் நிர்மலாதேவியிடம் 6 மணிநேரம் விசாரணை

மதுரை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவியிடம், ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் நேற்று விசாரணை நடத்தினார். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் கவர்னரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம் நேற்று காலை 9.20 மணிக்கு விசாரணைக்குழு உதவியாளர்களான கமலி, தியாகேஸ்வரி ஆகியோருடன் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சென்றார். தட்டச்சர் முத்துக்குமார், அட்டன்டர் யோவான் ஆகியோரும் உடன் சென்றனர்.காலை 9.30 மணி முதல் பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூவர் குழு விசாரணையை துவக்கியது. விசாரணையில், பல்வேறு புதிய தகவல்கள், விவிஐபிகள்  விவரங்களை நிர்மலாதேவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிபிசிஐடி போலீசாரிடம் ஒரு வீடியோ பதிவை கொடுத்திருப்பதாகவும், அதில் உயரதிகாரிகளுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தான் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ பதிவை சிலரிடம் கொடுத்துள்ளதாகவும், உரிய நேரத்தில் தேவை கருதி வெளியிட உள்ளதாகவும் நிர்மலாதேவி கூறியதாக தெரிகிறது.மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட விவிஐபிகளின் பட்டியலையும் அவர் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்விசாரணை காலை, மாலை என இரு கட்டமாக, சுமார் 6 மணிநேரம் நடந்தது. விசாரணை முழுவதையும் ஆடியோ பதிவாகவும், டைப்  செய்தும் உதவியாளர்கள் சேகரித்தனர்.
பின்னர் வெளியில் வந்த சந்தானம் நிருபர்களிடம் கூறும்போது,  ‘‘சிறைக்குள் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தார். பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளார். விசாரணையின்போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் எனது இறுதி அறிக்கையில் இடம் பெறும். இவருடனான விசாரணை முடிந்தது. நாளை (இன்று) அருப்புக்கோட்டை  கல்லூரி முதல்வர், செயலாளரிடம் விசாரணை நடத்துவேன். முருகன்,  கருப்பசாமியிடமும் விசாரணை நடத்துவேன்,’’ என்றார்.

முருகனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை;

நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்த, காமராஜர் பல்கலை உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் 5 நாள் விசாரணைக்கு நேற்று முன்தினம் எடுத்தனர். இவரிடம் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தேடப்பட்டு, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை, சாத்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி 4 நாள் விசாரணைக்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து கருப்பசாமி, இவரது நண்பரும் ஆராய்ச்சி மாணவருமான கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன், பேராசிரியர் முருகன் மூவரையும் நேருக்குநேர் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே முருகனை சஸ்பெண்ட் செய்ய துணை வேந்தர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.

உயர் அதிகாரிகள் சிக்குகின்றனர்;

உதவி பேராசிரியர் முருகன், காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வி இயக்குநர் விஜயதுரையை நேற்று முன்தினம் ஒரே அறையில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருவரும் முதுகலை தொழில் வேளாண்மை நிர்வாகப்பிரிவில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அப்போது தொலைதூரக்கல்வியில் பயின்ற சிலருக்கு, நிர்மலாதேவி உதவியுடன் உயரதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு முறைகேடாக பட்டங்கள் பெற்று தரப்பட்டதா? அப்படி பெற்றவர்களின் பெயர் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது. இருவரும் விசாரணையின்போது உயரதிகாரிகள் சிலரது பெயரை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Tags :
× RELATED சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது