×

சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் எடப்பாடி, விஜயபாஸ்கர், டிஜிபி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:  குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர்,  டி.ஜி.பி. ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறதே?ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அதிமுக ஆட்சியிலும் தடை செய்யப்பட்ட குட்கா பகிங்கரமாக நாடு முழுவதும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களின் உயிர்களை பலி வாங்கக்கூடிய குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு துணை நின்றவர், மக்களுடைய நலனைப் பாதுகாக்கக்கூடிய,  மக்களுடைய நல்வாழ்வுக்கான துறை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குட்கா புகழ் விஜயபாஸ்கர். அவர் மட்டுமல்ல, சட்டம்  ஒழுங்கை பாதுகாக்க  வேண்டிய காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாநகர கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு  தொடர்ந்து குட்கா விற்பனைக்கு மாமூல் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று ஆங்கில தொலைக்காட்சியில் ஏற்கனவே ஆதாரங்களுடன் செய்திகள்  வெளியாகின. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேச முயன்ற போது எங்களை வெளியில் தூக்கி எறிந்து விட்டனர். இதையடுத்து திமுக சார்பில் சட்டமன்ற  உறுப்பினர் ஜெ.அன்பழகன் மூலமாக நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இன்று உத்தரவிட்டு  இருக்கிறார்கள்.

 இந்த உத்தரவை திமுக சார்பில் மனதார வரவேற்கிறேன். அதே நேரத்தில், இந்த வழக்கு சிபிஐ அமைப்பால் சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு, உண்மை  நிலவரங்கள் வெளிவர வேண்டு மென்றால், அவர்கள் அனைவரும் முறையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  இருக்கின்ற அமைச்சர் குட்கா புகழ் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும்.குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்து இருக்கிறாரே?எப்போது சந்தேகம் வந்துவிட்டதோ, அப்போதே அந்தப் பொறுப்பில் இருக்க அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். எனவே, அவர்கள் பொறுப்பில்  இருந்து விலகிக் கொள்வதே சாலச்சிறந்தது. அதுமட்டுமல்ல, காவல்துறை டிஜிபிக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக வருமான வரித்துறை  அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவருக்கு காலநீட்டிப்பு கொடுத்ததோடு, பதவி உயர்வும் கொடுத்து, அவரை டிஜிபியாக நியமித்து இருப்பதே முதல்வர் எடப்பாடி  பழனிசாமிதான். அவருக்கு சூடு, சுரணை இருந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய  வேண்டும். அதுதான் அவருக்கும் அழகு, மக்களுக்கும் அதனால் பயன் கிடைக்கும்.

இந்த சூழ்நிலையிலும் குட்கா விற்பனை நடக்கிறதே?இந்த ஆட்சி இருக்கும் வரை குட்கா விற்பனை தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஏனென்றால், குட்கா மாமூல் வழங்கப்படுவது டிஜிபி ராஜேந்திரன்,  அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மட்டுமல்ல, அவர்கள் வாங்கும் மாமூலை முதல்வருக்கும், இன்னும் பல அமைச்சர்களுக்கும்,  அதிகாரிகளுக்கும் கூட கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இதை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்போம். திமுக ஆட்சி அமைந்ததும் லோக் ஆயுக்தா  சட்டத்தையும் கொண்டு வரவிருக்கிறோம். எனவே, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, சிறையிலடைப்போம்.இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?நேற்று அவர்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் சொன்ன போது, எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், திமுகவும் அவர்களுக்கு துணை  நிற்போம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களிடமும் தொலைபேசி மூலமோ அல்லது வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்தித்தோ வலியுறுத்துவேன்  என்று தெரிவித்தேன்.  அதன்பிறகு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள 10 அல்லது 15 முறை  முயற்சித்தேன்.

ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவை தொடர்பு கொண்டு விவரங்களை  எடுத்துக் கூறினேன். துறை அமைச்சருக்கு அந்த விவரங்களை தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், எங்களை நேரில் வந்து சந்தித்து, அரசின் சார்பில் உறுதிமொழி கொடுத்தால் போதும். ஏற்கனவே, 2016ல் மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அது காப்பாற்றப்படாமல் கிடப்பில்  போடப்பட்டு இருக்கிறது.அதேபோன்ற உறுதிமொழியை இப்போதுள்ள ஆட்சியாளர்களும், துறை அமைச்சரும் வந்து சொன்னால் போதும், நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம்  என்று சொல்லியுள்ளனர். எனவே, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நான் தொலைபேசியில் பேச தொடர்பு கொண்ட போது  அமைச்சர் கிடைக்கவில்லை என்றாலும், ஊடகங்கள் மூலமாக அமைச்சர் செங்கோட்டையனை மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு  மு.க.ஸ்டாலின் கூறினார்.

முழுமையான, விரைவான விசாரணை தேவை
‘குட்கா’ விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். தடை செய்யப்பட்ட போதைப்  பொருளான குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுமதித்து, அதற்காக மாதந்தோறும் லஞ்சம்  பெற்றுக் கொண்டதாக குட்கா முதலாளிகளின் டைரியிலேயே இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர்  டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவிநீக்கம் செய்து முழுமையான, உண்மையான விரைவான விசாரணை  நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுடன் ஜெ.அன்பழகன் சந்திப்பு
குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி திமுக எம்.எல்.ஏ. ெஜ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, ஜெ.அன்பழகன் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை  சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பொன்முடி உடனிருந்தனர். பின்னர் ெஜ.அன்பழகன் கூறும்போது,  ‘இது நாங்கள் கூறிய குற்றச்சாட்டு அல்ல. வருமான வரித்துறை கூறிய குற்றச்சாட்டு. இதை அரசு மூடி மறைக்க முயன்றதால் உண்மையை  வெளிக்கொண்டு வர நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்ற தீர்ப்பை ஏற்று டி.ஜி.பி. ராஜேந்திரனும், அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனடியாக பதவி  விலக வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...