×

சீனா சென்றார் பிரதமர் மோடி அதிபர் ஜின்பிங்குடன் இன்று சந்திப்பு: இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம்

உகான்: சீன  அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் இன்று சந்தித்து பேசுகின்றனர். பிரதமர்  மோடி நேற்று மாலை சீனா சென்றார். அந்நாட்டின் பிரபல சுற்றுலாத்தலமான உகான் நகரில் ‘கிழக்கு ஏரிக்கரை’ பகுதியில் அதிபர் ஜின்பிங்கை இன்று சந்தித்து பேசுகிறார். இந்த இடம் சீன புரட்சிகர தலைவர் மா ஜியோடாங்ககுக்கு பிடித்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மா ஜியோடாங் நினைவு இல்லத்தை மோடிக்கு, ஜின்பிங் சுற்றி காட்டுகிறார்.  இது வழக்கமான சந்திப்பு போல் இருக்காது. கிழக்கு ஏரிக்கரையில் இரு தலைவர்களும் நடந்து கொண்டே ஜாலியாக பேசவுள்ளனர். படகு சவாரியும் செல்கின்றனர்.

இந்த சந்திப்பில் இருதரப்பு இடையே எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது. எந்த கூட்டறிக்கையும் வெளியிடப்படாது. இரு தலைவர்களும் பல விஷயங்கள் குறித்து மனம்விட்டு பேசவுள்ளனர். இங்கு மோடி தங்குவதற்கு மிகவும் சொகுசான இடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதன் விவரம் பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்கப்படாது எனவும் சீனா கூறியுள்ளது.

இதே போன்ற சந்திப்பு, கடந்த 2014ம் ஆண்டு குஜராத் சமர்பதி ஆசிரமத்தில் நடந்தது. அதன்பின் தற்போது இருவரும் உகானில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு, கடந்த 1988ம் ஆண்டு சீன தலைவர் டெங் ஜியோபிங்கும், அப்போதைய இந்திய  பிரதமர் ராஜிவ் காந்தியும் சந்தித்து பேசியது போல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என சீன பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளன.

சீன பயணம் குறித்து டெல்லியில் நேற்று பேட்டியளித்த மோடி, ‘‘சீன அதிபர் ஜின்பிங்கும், நானும் இருதரப்பு மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பேசவுள்ளோம். நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்கு, உலக நிலவரம் குறித்து பேசுகிறோம். நீண்ட கால அடிப்படையில் இந்தியா-சீனா உறவை வளர்ப்பது குறித்தும் நாங்கள் பேசுவோம்’’ என்றார்.
இந்த சந்திப்பு மூலம் இந்தியா - சீனா இடையேயான உறவும், நம்பிக்கையும் மீண்டும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Tags :
× RELATED இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு