×

எஸ்சி, எஸ்டி பிரிவின் அரசு பணியாளர் விவகாரத்தில் 20 ஆயிரம் பேரின் பதவி உயர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா தகவல்

புதுடெல்லி: கர்நாடக மாநில அரசு பணிகளில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பதவி உயர்வை உச்ச  நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்துள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசு அலுவலக பணியில் பதவி உயர்விற்கான  முன்னுரிமையானது 1978ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவ்வாறான பதவி உயர்வை உச்ச நீதிமன்றம் கடந்த  ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதைத்தவிர பதவி உயர்வு என்பது அனுபவம் மற்றும் தகுதி அடிப்படையில்  மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் எனவும், இடஒதுக்கீடு முறையில் பெற்ற பதவி உயர்வை ரத்து செய்து பழைய பதவியையே  அவர்களுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல இடைக்கால மனுக்களையும் உச்ச  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காத கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு  வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கோரிய கர்நாடகாவின் மனுவையும் ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் ஒரு மாத  காலத்தில் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் கர்நாடக மாநிலத்தின் தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில்  அஜராகி விளக்கமளிக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கையோடு கூடிய உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் கர்நாடக மாநில அரசு தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  “எஸ்சி, எஸ்டி பிரிவினரின் அரசு அலுவலக பணியின் பதவி உயர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது முழுமையாக  செயல்படுத்தப்பட்டு சுமார் 20 ஆயிரம் பேரின் பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்