×

சீல் நடவடிக்கை: சாத்திய தீர்வை கண்டறிய ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: தலைநகரில் தொடரும் சீலிங் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர சாத்திய தீர்வை கண்டறிவது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஆளுநர் அனில் பைஜால்  உள்ளிட்டோருடன் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. பாஜ ஆளும் மூன்று மாநகராட்சிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மாற்று கட்டணம் செலுத்த தவறிய நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது உச்ச நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழு கடந்த டிசம்பர் மாதம் முதல் சீல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து வர்த்தகர்கள் நடத்திய போராட்டத்தின் பயனாக டெல்லி மேம்பாட்டு ஆணையம்(டிடிஏ) மாஸ்டர் பிளான் 2020 திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது. எனினும் இந்த திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில் சீலிங் நடவடிக்கைக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சாத்திய தீர்வுகளை கண்டறியும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஆளுநர் பைஜால் மற்றும் டிடிஏ துணை தலைவர் உதய் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவுக்கு பின் புரி கூறுகையில், ‘சீலிங் நடவடிக்கையால் காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான சாத்திய தீர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் மாஸ்டர் பிளான் 2020ல் செய்யப்பட்ட திருத்தங்களுக்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த புரி, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பணிசெய்யும் அதிகாரிகள், பிழைப்பு தேடி கிராமங்களில் இருந்து நகர்புறங்களுக்கு வரும் மக்களின் நிலையை புரிந்து கொள்ளமாட்டார்கள் என கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...