×

ஒரே இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு செக் : பதிவுத்துறை ஐஜி குமரகுருபன் அதிரடி

சென்னை: ஒரே இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக பத்திர பதிவுத்துறையில் 9 மண்டலம், 50 மாவட்ட பதிவாளர், 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதில், இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் பணியிட மாற்றம் செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், அவ்வாறு அவர்கள் செய்வதில்லை. இதனால், அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இது ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் வழிவகுப்பதுடன் பணிமாறுதல் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அந்த வாய்ப்பு தடுக்கப்படுகிறது. இதில், இளநிலை உதவியாளர், உதவியாளர்கள் சிலர் பத்திரம் பதிய வரும் பொதுமக்களை மிரட்டி பணம் கேட்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பதிவுத்துறை தலைமை அலுவலகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்தது. அதன்பேரில் இவர்களின் பணியிட மாற்றம் செய்வதில் புதிய நடைமுறை ஏற்படுத்தி பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:சார்பதிவு நிலைக்கு கீழ் உள்ள அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட மாறுதல் வழங்கப்படுகிறது. மேலும், துணை பதிவுத்துறை தலைவர், உதவி பதிவுத்துறை அலுவலகங்களை பொறுத்தவரையில் மாவட்ட மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டு முதுநிலையை பின்பற்றாமல் மாறுதல் வழங்க கூடாது. 3 வருடங்களுக்கு மேல் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், அவர்களுக்கு வேறு இருக்கை வழங்கி அதே அலுவலகத்தில் பணி மாறுதல் வழங்கலாம். எக்காரணத்தை கொண்டு அதே இருக்கையில் பணிபுரிய அனுமதிக்க கூடாது. தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி முடித்த பின் பெறப்படும் பணி மாறுதல் கோரிக்கை மனுக்கள் ஒரு பதிவேட்டிலும், ஓராண்டு பணி முடித்த பின் பெறப்படும் மனுக்களை இன்னொரு பதிவேட்டிலும் பதியப்பட வேண்டும். துணை பதிவுத்துறை தலைவர், உதவி பதிவுத்துறை தலைவர் அலுவலகம் ஆகியவற்றிற்கு மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் மாவட்ட மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் துணை பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பட்டு அவரால் இப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு மாறுதல் கோரி மாவட்ட பதிவாளருக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளரால் பராமரிக்கும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் முடிந்த மறு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை ஐஜிக்கு தவறாமல் தெரிவிக்க வேண்டும்.

Tags :
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி