×

திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா நதியில் தொடரும் மணல் திருட்டு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா நதியில் இருந்து அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பகுதியிலுள்ள ஆறுகளிலிருந்து மணல் மற்றும் சவுடு மணல் அதிகளவில் அனுமதியின்றி அள்ளி செல்லப்படுகிறது. இதுபோல முறையான அனுமதியின்றி மணல் மற்றும் சவுடு மணல் ஏற்றி வரும் லாரி மற்றும் டிராக்டர்களை அடிக்கடி தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் வருவாய் துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான லாரிகள் திருத்துறைப்பூண்டிக்கு வந்து அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதை வாடிக்கையாக செய்து வருகின்றன. இதுபோன்ற லாரிகளையும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்கின்றனர்.  

ஆனாலும் மணல் திருட்டு தொடர்கதையாகி வருகிறது. அதேபோல், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அரிச்சந்திரா நதியில் பகல் நேரங்களில் அனுமதியின்றி அதிகளவில் மணல் அள்ளப்பட்டு லாரி, டிராக்டர்களில் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி–்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தற்போது அரிச்சந்திரா நதி செல்லும் ஆலிவலம், ஆண்டாங்கரை கிராம பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் அள்ளுகின்றனர். இதன்படி ஒருசிறிய அளவிலான சரக்கு ஏற்றும் வேனில் அள்ளப்படும் மணல் ரூ.3000 என்று பிற பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி தொடர்ந்து வரும் மணல் திருட்டு காரணமாக இந்த பகுதிகளில் அரிச்சந்திரா நதி பரிதாப நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே, இதுபோல இரவில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்திட அதிகாிரகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...