×

அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை திண்டிவனம், மரக்காணத்தில் கடையடைப்பு, மறியல்: பதற்றம் - போலீஸ் குவிப்பு

திண்டிவனம்: அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை விவகாரம் தொடர்பாக திண்டிவனம், மரக்காணத்தில் விசிக திடீர் மறியல் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிறுவாடி கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்துள்ளனர். நேற்று காலை இதை கண்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சிலைகளை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி திண்டிவனம் - மரக்காணம் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி திருமால் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்துவிடுவதாக உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுபோல் மரக்காணம் அருகே முருக்கேரி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு கடைகளை மூடுமாறு கூறினர். இதன் காரணமாக அங்கு இருந்த அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. தகவலறிந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி இளங்கோ தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். 6 பஸ்கள் உடைப்பு: திண்டிவனம் மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து நேற்று காலை வந்த 3 அரசு பஸ்கள் மற்றும் சென்னை நோக்கி சென்ற 3 அரசு பஸ்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் மற்றும் மேம்பாலம் அருகில் பஸ்சுக்காக காத்து இருந்த பயணிகள் அலறி அடித்து சிதறி ஓடினர். அப்போது சிலர் அங்கு இருந்த கடைகளை மூட வற்புறுத்தினர்.

இதனால் அங்கு பதற்றம்  ஏற்பட்டது. தகவலறிந்த திண்டிவனம் போலீசார் வந்து கடைகளை மூட சொன்னவர்களை விரட்டி அடித்தனர். இதனால் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்ட்டன. இதை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மேம்பாலத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டனர். இதுதொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி...